22
ஆழ்கடலில்
பரிமேலழகர் உரை:- இக் கனவிய குழையை யுடையாள், இப்பொழிற்கணுறை-வாளோர் தெய்வ மகளோ? அன்றி யொரு மயில் விசேடமோ? அன்றி யொரு மானுட மாதரோ? இவளை யின்னளென்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது. ‘ஓ’ அசை.
(ஆராய்ச்சி விரிவுரை) இக்குறட்பாவிலுள்ள ‘கொல்’, ‘கொல்லோ’ என்னுஞ் சொற்கள் இலக்கணங் கல்லாதார்க்கு என்னவோபோல் தோன்றலாம்; புரியாதிருக்கலாம். வட மொழி இலக்கணம், தமிழ்மொழி இலக்கணம் எல்லாங் கற்ற மிக மிகப் பெரிய உரையாசிரியரகிய பரிமேலழகரே இங்கே கோட்டை விட்டு விட்டாரே! *‘ஓ’ என்பதை ‘அசை’ என ஒதுக்கிவிட்டாரே! இப்பாட்டின் உயர்நிலைக் கட்டமே (climax) இந்த ‘ஓ’ என்பது தானே! (கொல் + ‘ஓ’= கொல்லோ) இதை ‘அசை’ என்னலாமா? அசை என்பது, பாட்டை நிரப்புவதற்காக - இடம் அடைப்பதற்காகப் பெய்யப்படுவதாகும். அதற்கென்று பொருள் மதிப்பு ஒன்றும் இல்லை. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், அரிசியில் கலந்து விற்கும் கல் போன்றது அது. வள்ளுவரா அந்தக் குற்றம் புரிவார்? அவரிடம் ‘சரக்கு’ மிக உண்டு. கற்றுக்குட்டிப் புலவர் வேண்டுமானால் அவ்வாறு செய்து பாட்டைச் சரி கட்டலாம். இப்போது பொருளுக்கு வருவோம்.
கொல், ஒ என்பவற்றைத் தனியே நோக்குங்கால் பொருள் மதிப்பு இல்லை. சொற்களோடு சேர்ந்து வரும் போது பொருள் மதிப்பு உண்டு. ‘இதைச் செய்தவன் அவன்’ என்ற தொடருக்கும், “இதைச் செய்தவன் அவன் கொல்” என்ற தொடருக்கும் வேறுபாடு தெரியவில்லையா?
- "ஒ அசை என்று தொல்காப்பியர் ஒத்துக் கொள்ளவில்லை. நன்னூலாரே கூறியுள்ளார்.