பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

31


இயல்புடைய மூவர்

(தெளிவுரை) இல்லறத்தான், இயல்பாகவே தன்னோடு உரிமை உடைய தன் பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை என்னும் மூவகையர்க்கும் நல்ல துணையாய் நின்று காக்கக் கடமைப் பட்டவனாவான்.

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை."

(பதவுரை) இல்வாழ்வான் என்பான் - வீட்டில் மனைவியுடன் இருந்து வாழும் குடும்ப வாழ்க்கையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் . இயல்பு உடைய - இயற்கையாக உரிமை உடையவர்களாக உள்ள, மூவர்க்கும் - (பெற்றோர், மனைவி, மக்கள் என்னும்) மூவகையார்க்கும், நல் ஆற்றின் - (நல்வாழ்வு என்னும்) நல்ல வழியிலே நின்ற துணை - (உதவியாகக் கிடைக்கப்பெற்று) நின்ற துணையாவான் , (விரிவுரை) ஒரு பெண், தன் இளம்பருவத்தில் பெற்றோரின் உதவியாலும், இடைத்தரமான பருவத்தில் கணவனின் உதவியாலும், கிழப்பருவத்தில் பிள்ளையின் உதவியாலும் வாழ்வதாகக் கூறுவதியல்பு, அதுபோவே ஓர் ஆண் மகனும், இளம் பருவத்தில் பெற்றோர் உதவியாலும், இடைத்தரமான பருவத்தில் மனைவியின் உதவியாலும், கிழப்பருவத்தில் பிள்ளையின் உதவியாலும் வாழ்கின்றான். இம்முறையாக நோக்குங்கால். ஓர் இல்வாழ்வான் ஒரு சேரத் தன் பெற்றோரையும் மனைவியையும் மக்களையும் காப்பாற்றவேண்டிய கட்டாயக் கடமை உடையவனாய்க் காணப்படுகின்றான் என்பது தெளிவு. பொருட்செறிவுடைய கதையொன்றும் புகலப்படுவது உண்டு நம் நாட்டில்!