பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

35


இருப்பது புரிகிறது. அவன் மேல் கருத்து இல்லை யென்றால், அவனை ஒரு முறைக்கு மேல் மறு முறை அவள் பார்த்திருக்கக் கூடாது. அவன் பார்க்குந் தோறும் அவளும் பார்க்கிறாள் என்றால் அதற்கு என்ன பொருள்? நாம் இரவில் 'மோட்டார்' வண்டியில் செல்லும்போது, எதிரே ஒரு வண்டி வரும். இரண்டிலும் விளக்கு எரியும். ஒவ்வொரு சமயம் வண்டியோட்டிகள் இருவரும் மாறி மாறி விட்டு விட்டு விளக்கை நிறுத்தி எரியவைப்பார்கள். அது போலவே இங்கும்! தலை குனிதல் - எதிர் நோக்குதல், தலை குனிதல் - எதிர்நோக்குதல். இந்த நுட்பமான குறிப்பைத்தான் நோக்கெதிர் நோக்குதல்' என்னும் தொடரில் அடக்கி வைத்துள்ளார் ஆசிரியர், அணுவுக்குள் ஆழ்கடல் அல்லவா அது?

முதலிலேயே அந்த ஆரணங்கின் மேனியழகிலே மயங்கித் தவித்துத் தத்தளிக்கும் அவனை அவளது "குறு குறு" குறும்புப் பார்வை வேறு வாட்டி வதைக்குகிறது . வலியவன் ஒருவன் தன்னினும் மெலியவன் ஒருவனைத் தான் தாக்குவதல்லாமல் தன் ஆட்களையும் விட்டுத் தாக்குகிறான். இதைத்தான் தாக்கணங்கு ஒப்புமை வாயிலாகக் கூறியுள்ளார் வள்ளுவர். இந்த நோக்கெதிர் நோக்கிய போரில் அவன் கண்ணடி. தாளாமல் கலங்கி விட்டான்; படுதோல்வியும் அடைந்து விட்டான். கண் நோக்கு அவ்வளவு கனமானது போதும்!

இந்த எளிய செய்தியை எவ்வளவு சுவைபடச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இந்தக் குறளைக் கற்காமல், கத்தரிக்காய் - காதல் கதை வெளியீடுகளைக் கட்டியழுது கொண்டிருக்கின்றார்களே நம்மவர்கள்! உலகில் காதல் இலக்கியம் வேண்டுபவர்கள், வள்ளுவரின் காமத்துப்பாலை வந்து பார்க்கட்டும் - என்று அறைகூவல் விடுகிறேன்.