பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
ஆழ்கடலில்
 

எமனைப் பார்த்தேன்

(தெளிவுரை) உலகில் 'எமன் எமன்' என்று பலரும் சொல்லக் காதால் கேட்டிருக்கிறேனே தவிர, அந்த எமனை இதற்கு முன்பு நேரில் கண்டதில்லை; ஆனால், பெண் தன்மையோடும் போரிடும் பெரிய கண்களோடும் அந்த எமன் என் எதிரில் நிற்பதை இதோ நேரில் காண்கிறேன்.

"பண்டறியேன் கூற்றென் பதலை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு"

(பதவுரை) கூற்று என்பதனை = எமன் என்று சொல்லப் படுவதை, பண்டு அறியேன் = முன்பு பார்த்தறியேன்; (ஆனால் அது) பெண்தகையால் = பெண் தன்மையோடு, பேர் அமர் கட்டு = பெரிய போர் செய்கின்ற கண்களையும் உடையது என்பதை, இனி அறிந்தேன் = இப்போது (நேரில் பார்த்து) அறிந்து கொண்டேன். (கூற்று = எமன்; இனி = இப்பொழுது, பெண்தகை = பெண் தன்மை; அமர் = போர்; கட்டு (கண் + டு) = கண்களை உடையது.)

(மண- உரை) பண்டு கூற்றின் வடிவு இன்ன பெற்றித் தென்பதை அறியேன்; இப்பொழுது அறிந்தேன்: அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களை யுடைத்து.

(பரி-உரை) கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டறிவதல்லது கண்டறியேன்; இப்பொழுது கண்டறிந்தேன்; அது பெண்டகையுடன் பெரியவாய் அமர்த்த கண்களை யுடைத்து.

(விரிவுரை} கூற்று - கூற்றுவன் என்றால் எமன், எமனது வேலை, உடல் வேறு உயிர் வேறாகக் கூறு போடுதல் அதாவது கொல்லுதல் என்றும், அவனது அலுவலகம் (ஆபீசு) தென்திசையில் இருக்கிறதென்றும் கூறுகின்றனர்.