பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

37


அது என்னவோ? அதைப் பற்றிய ஆராய்ச்சி இங்கு வேண்டியதில்லை உயிரைக் கொல்லும் ஆற்றலைக் கூற்று என்பது உலகியல், உயிர் போக்குவதைப் போல மிகுந்த தாங்கமுடியாத துன்பம் கொடுப்பவரை நோக்கி, 'அட எமனே' என்று நோவது உலகில் கண்கூடு.

இங்கே, அப்பெண் அவனுக்கு எமனாகத் தோன்றுகிறாள். அவளது பெண்தகை அதாவது பெண் தன்மை அதாவது பெண் தோற்றம் அதாவது நாணிக் கோணி ஒடிந்து வளைந்து சாய்ந்து சரிந்து நிற்கும் அழகுப் பொலிவு அவனது காமத்தைத் தூண்டித் துலங்கச் செய்து விட்டது. அதனோடு, நெருப்பில் நெய்வார்த்தாற் போல, நோக்கெதிர் நோக்கிப் போர் புரியும் பெரிய கண்களும் சேர்ந்து கொண்டன, அவளைப் பெறமுடியாமல் காமத் தீயால் வருந்துகின்றானாதலின், அதற்குக் காரணமான அவளை எமன் என்கிறான். அவளை மணந்தால் அவனுக்கு வாழ்வு: அவள் கிடைக்கவில்லையானால் சாவே. எனவே, இன்னும் கிடைக்கப் பெறாத அவள் அவனுக்கு எமனாகத் தோன்றுவதில் வியப்பு ஒன்றும் இல்லையல்லவா?

இன்னொரு கோணத்திலும் இக்கருத்தைப் பொருத்திப் பார்க்கலாம். இசையரங்கில் ஒருவர் மிக நன்றாகப் பாடினார் என்றால், "இன்றைக்குக் கொன்று விட்டார் கொன்று" என்று கூறுவது வழக்கம். அதே போலே, தன் பேரழகுத் தோற்றத்தாலும், குறும்புப் பார்வையாலும் அவள் தன்னைக் கொன்று விட்டதாக அவன் கூறியிருக்கிறான், பார்க்க முடியாத எமனைப் பார்த்ததாகக் கற்பனை செய்து காட்டியுள்ள வள்ளுவரின் கலைத்திறன் தான் என்னே !