பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40
ஆழ்கடலில்
 

முதலியன கொடுத்தல்' என்று பொருள் கூறி, ஈகை என் பதற்கு ஈகை என்றே பொருள் எழுதி நழுவி விட்டார். பரிமேலழகரோ, கொடை என்பதற்கு 'வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல்' என்று பொருள் சு.றி, ஈகை என்பதற்கு 'ஈகை -- கொடை, (இந்த) ஈகை படைக்குரித்து' என்று எழுதி ஒருவாறு தள்ளிவிட்டுத் தப்பித்துக்கொள்ள முயன்றிருக்கிறார். இவ்வுரைகள் பொருத்தமாய்ப் புலப்படுகின்றனவா? இங்கே நான் சொல்லும் பொருள் என்ன?

ஈ, தா, கொடு என மூன்று சொற்கள் நெருக்கமான பொருள் உடையனவாய்த் தமிழில் இருப்பதை நாம் அறிவோம். அவற்றுள் ஒவ்வொன்றிற்கும் வேற்றுமையும் உண்டு. ஈதல் (ஈகை) என்பது, ஒருவன் தன்னிலும் தகுதியில் தாழ்ந்தவருக்கு உதவுதலாம். "வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை" என வள்ளுவரே, "ஈகை" என்னும் தலைப்பின் முதல் குறளில் கூறியுள்ளார், தருதல் (தா) என்பது தன்னோடு தகுதியில் ஒத்தவருக்கு உதவுவது . கொடுத்தல் (கொடை) என்பது, தன்னிலும் தகுதியில் மிக்கவருக்கு உதவுவது. இக்கருத்துகளை

"ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே"
"'தா வென் கிளவி ஒப்போன் கூற்றே"
"கொடு வெண் கிளவி உயர்ந்தோன் கூற்றே"

என்னும் தொல்காப்பிய (சொல்லதிகாரம் - எச்சவியல்49, 50, 51) நூற்பாக்களாலும்,

"ஈ தா கொடு வெனும் மூன்றும் முறையே
இழிந்தோன் ஒப்போன் மிக்கோல் இரப்புரை"

என்னும் நன்னூல் (சொல்லதிகாரம்-பொதுவியல் - 56) நூற்பாவாலும் நன்கு உணரலாம்.