பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஆழ்கடலில்


இரண்டாவதாகத் தொடர்ந்து கொண்டேன். மற்ற குறள்களின் தொடர் வரிசை யமைப்பையும் கூர்ந்து நோக்கி உண்மையுணர்க.

வேந்தர்க்கு இயல்பு
"அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு"

(பதவுரை) அஞ்சாமை -- (அஞ்சக்கூடாதவற்றுக்கு) அஞ்சாதிருத்தலும், ஈகை - ஏழை எளியார்க்கு உதவலும், அறிவு = சிறந்த கூரிய அறிவும், ஊக்கம் = தளராத மன எழுச்சியும், இந்நான்கும் = ஆகிய இந்த நான்கு பண்புகளும், எஞ்சாமை = குறையாதிருப்பது அதாவது நிறைந்து நிலைத்திருப்பது, வேந்தர்க்கு இயல்பு = ஓர் அரசனுக்கு இருக்க வேண்டிய தன்மை (இலட்சணம்) ஆகும். (எஞ்சுதல் - குறைதல்; எஞ்சாமை = குறையாமை)

(மணக்குடவர் உரை) அஞ்சாமையும், ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையு மென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக் கியல்பு.

(பரிமேலழகர் உரை) அரசனுக்கியல்பாவது, திண்மையும் கொடையும் அறிவும் ஊக்கமுமென்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல். இவற்றுள் அறிவு ஆறங்கத்திற்கு முரித்து ; ஈகை படைக்குரித்து; ஏனைய வினைக்குரிய.

(விளக்கவுரை) அஞ்சுபவர்கள் அரச பதவியில் நீடிக்க முடியுமா? "கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையா?" அஞ்சி அஞ்சி எந்தக் காரியத்தை இயற்ற முடியும்? அதனால் "அஞ்சாமை" வேண்டும் என்றார். பின்னர் ஈகை, ஈகை படைக்கு உரித்து, என்றார் பரிமேலழகர். எந்த அகராதியில் இவ்வாறு சொல்லியிருக்கிறதோ? நான் முன் குறள் உரையில் ஆராய்ந்துள்ளபடி, ஈகை என்பது, அரசன்