பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

47


விருந்து என்பதற்கு நேர் பொருள் புதுமை. "விருந்து புதுமை" என்பது திவாகரம் (8 : 123). வெள்ளை கறக்கிறது என்றால், வெள்ளையான பசு கறக்கிறது என்று பொருள் கொள்வதைப்போல, விருந்து வந்தது என்றால் - புதிதான மனிதர் வந்தார் என்று பொருள் கொள்ளல் வேண்டும். இதற்குத்தான் ஆகுபெயர் என்று பெயர், ஆகுபெயர் என்றால் ஒன்றைக் குறிக்கும் ஒரு பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றுக்கு ஆகிவருவது. புதுமையைக் குறிக்கும் விருந்து என்னும் பெயர், புதிதாய் வருகின்ற மனிதர்க்கு ஆகிவருவதால் இஃது ஆகுபெயராகும். எனவே, முன்பின் வந்துகொண்டிருக்கும் தொடர்புடைய உறவினர்கள் விருந்தினர் ஆகமாட்டார் என்பதும் திடீரெனப் புதிதாக வருபவரே விருந்தினர் ஆவர் என்பதும் வெட்ட வெளிச்சம், திருக்குறள் விருந்தோம்பல் என்னும் பகுதியிலுள்ள "வருவிருந்து வைகலும் ஓம்புவான்", "செல் விருந்தோம்பி வரும் விருந்து பார்த்திருப்பான்" என்னும் குறட்பகுதிகளாலும் இதனைக் குறிப்பாய் உணரலாம். மேலும் இக்குறளிலேயே ஒக்கல் (சுற்றம்) என ஓன்று தனியாகக் கூறியுள்ளமையே, உறவினர் விருந்தினர் ஆகார் என்பதற்கு மறுக்க முடியாத அகச்சான்றாகும். சரி நல்லது; புதிதாக வருபவரே விருந்தினர் என்பீராயின், அவர்களை முன் குறளில் உள்ள துறந்தார், துவ்வாதவர் என்பவர்க்குள் அடக்கிவிடக்கூடாதா? என்று வினவலாம். அடக்க முடியாது; ஏன்?

ஓர் ஊரில் விழா நடக்கின்றது. மாநாடு நடக்கின்றது. இன்ன பிற சிறப்புகள் நடைபெறுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அவ்வூர்க்குப் புதிய மக்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வருவார்கள். அப்புதியோர்க்கு, ஊரினர் தங்க இடம் அளிக்கலாம்; குளிக்கவும், குடிக்கவும் தண்ணீர் வசதி செய்து தரலாம்; இயலுமேல், வந்தவர்க்கும்