பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை


கடுகும் அணுவும்:

திருவள்ளுவனாரின் திருக்குறளைத் திறனாய்வு செய்த இடைக்காடர் என்னும் புலவர்,

"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்"

எனக் கூறியுள்ளார். மிகவும் சிறிதளவு என்பதற்குக் ‘கடுகளவு’ எனக் கூறும் மரபு உண்டு. ஒரு சிறிய கடுகைத் துளைத்து அதனுள் ஏழு கடலைப் புகுத்தமுடியுமா? முடியாது. ஆனால், அந்த அரிய செயலைத்தான் திருவள்ளுவர் தம் ஒவ்வொரு குறட்பாவிலும் ஆற்றியுள்ளதாக இடைக்காடர் இயம்பியுள்ளார். ஒளவையார் என்னும் புலவர் பெருமாட்டியோ,

"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்"

என்று பாராட்டியுள்ளார். அணு என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் ‘Atom’ என்பது. இந்த Atom என்பதற்குப் பிளக்க முடியாதது என்பது பொருளாம். ஆனால், இருபதாம் நூற்றாண்டில் அணு பிளக்கப்பட்டதை உலகு அறியும். அணுவைப் பிளத்தல் - துளைத்தல் என்ற ஒரு குறிப்பைப் பல நூற்றாண்டுகட்கு முன்பே ஒளவையார் அறிவித்துள்ளார்.

பிளக்க முடியாத - துளைக்க முடியாத அணுவையும் துளைத்து அதனுள் ஏழுகடலைப் புகுத்துவது போன்ற அரிய பெரிய செயலைத் திருவள்ளுவனார் செய்துள்ளாராம். அதாவது ஒவ்வொரு குறளிலும், அரிய பெரிய - ஆழ்ந்த உயர்ந்த - பரந்த விரிந்த கருத்துகள் உள்ளன என்பது இதன் பொருளாகும்.

ஆணி முத்துகள்:

எனவே, திருக்குறள் நூலை ஒரு மாபெருங்கடல் என்று கூறலாம். கடலிலே முத்துகள் இருக்கும். திருக்குறளாகிய மாபெருங்கடலில் ஆயிரத்து முந்நூற்று முப்பது ஆணிமுத்துகள் இருக்கும். முத்துகளுள் மிகவும் உயர்ந்த