பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
ஆழ்கடலில்
 


சுற்றத்தார்களோடு கொள்ளும் தொடர்புக்கும் வேற்றுமை மிக உண்டு. வெளியூருக்குச் சென்ற பெற்றோரோ மனைவியோ, மக்களோ திரும்ப வீட்டிற்கு வந்தால், வீட்டிற்குரியவன் பிறரை நோக்கி, என் வீட்டிற்குச் சொந்தக்காரர் வந்திருக்கிறார் என்றோ விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் என்றோ சொல்லும் வழக்கம் எங்கும், என்றும் இல்லை. ஏனைய உறவினர் வந்தால் அப்படிச் சொல்லுவது உண்டு. தமையன், தமக்கை, தம்பி, தங்கை என்பவரும் தனித்தனிக் குடும்பத்தினராக ஆய்விடுவதால் அவர்களும் விருந்தாளிகளாகக் கருதப்பட்டு விடுவதை நாம் வாழ்க்கையில் கண்டே வருகின்றோம். மேலும், - ஒருவன் தன் பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை என்பவர்க்கு உரிய உடைமைகளையெல்லாம், ஏறக்குறையத் தனக்கும் உரியனவாக எண்ணுகின்றான். ஏனையோர் உடைமைகளை அங்ஙனம் எண்ணுவது இல்லை. எனவே இம்மூவரும், ஏனையோரைப்போலச் சுற்றத்தார் என்னும் சொற்குள் கட்டுப்படாமல், பிரிக்க முடியாத குடும்ப உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றார்கள் என்பது இனிது புலனாகும், இதற்கு அகச்சான்று வேண்டுமானால், ‘இயல்புடைய மூவர்க்கும்’ என்பதில் உள்ள ‘இயல்புடைய’ என்னும் சொற்றொடர் ஒன்றே போதுமே! சுற்றம் ஓம்புதலாவது:- பல வேலைகளின் நிமித்தம் வெளியூரிலிருந்து வந்து போகும் சுற்றத்தார்க்கு உணவு முதலியன உதவுதல், ஆதரவற்ற சுற்றத்தார்களைத் தம்மோடு வைத்து ஆதரித்தல், அன்னோரின் பிள்ளைகட்குக் கல்வி வசதி செய்தல், அன்னோர்க்கு ஏதேனும் வருவாய்க்கு வழி தேடித்தருதல் முதலியனவாம். இவ்வுதவிகளையெல்லாம் இல்லறத்தான் இயன்றவரை இயற்றலாமே!

ஐந்தாவதாக (தான்) இல்லறத்தான் தன்னையும் ஓம்பவேண்டும் என்று தெரிவித்துள்ளார் திருவள்ளுவர்.