ஆணிமுத்துகள்
57
மூன்றும் உடைத்து = இந்த மூன்று தன்மைகளையுமே ஒருங்கு கலந்து பெற்றுள்ளது.
(கூற்றம்-எமன் ; பிணை - பெண்மான்; மடவரல் - இளம் பெண்.)
(மணக்குடவருரை) கொடுமை செய்தலால் கூற்றமோ? ஒடுதலால் கண்ணோ ? வெருவுதலால் மானோ? மடவரலே? நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து.
(பரிமேலழகருரை) என்னை வருத்துதலுடைமையாற் கூற்றமோ? என் மேலோடுதலுடைமையாற் கண்ணோ ? இயல்பாக வெருவுதலுடைமையாற் பிணையோ? அறிகின் றிலேன், இப்ப மடவரல் கண்களிநோக்கம் இம்மூன்றன் தன்மையையு முடைத்தாயிரா நின்றது .
(விரிவுரை) அவளது கண்பார்வை தன்னை வருத்தியதால் கூற்றமோ என்றான் அவன். சிலநேரம் அன்போடு ஆசையோடு பார்ப்பதாகப் பட்டதால் உண்மையான கண்ணோ என்றான் , வெளியிடத்திலே புதிய ஆண் மகனைக் கண்டதால் ஏற்பட்ட நாணத்தோடும் அச்சத்தோடும், சுழல் விளக்குபோல் மேலும் கீழும் சுற்றிச் சுழற்றி மிரண்டு மிரண்டும் பார்ப்பதால், மருண்டு மருண்டு பார்த்தோடும் மான் பிணையோ என்றான், இவற்றுள் எந்த ஒன்றாகத் துணிந்து கூறுவது? நேரத்துக்கு ஒரு நிறமளிக்கும் 'வெல்வெட்' (Velvet) பட்டுத் துணியைப் போல, நேரத்துக்கு ஒரு குணம் தெரிகிறது. எனவே, அவளது கண்பார்வையில் மூன்று தன்மைகளுமே ஒருங்கு அமைந்திருப்பதாக உரைத்தான் அவன்.
இங்கே யானை பார்த்த குருடர்கள் கதை நினைவிற்கு வருகிறது. வாலை மட்டும் தடவிப் பார்த்த குருடன், 'யானை விளக்குமாறு போல் இருக்கிறது' என்றானாம்.