பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

ஆழ்கடலில்


ஆகவே, ஆளும் அரசனுக்குச் சுறுசுறுப்பு வேண்டும். எதையும் உரிய காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும். "உயிர் போன பிறகு தண்ணீர் கொண்டுவந்து என்ன பயன்?" "இராசா சிங்காரிப்பதற்குள் பட்டணம் பறிபோய் விட்டது" என்னும் பழமொழி இத்தகைய துப்புக்கெட்ட 'தூங்கு மூஞ்சி' ஆட்சியாளர்களுக்காகவே எழுந்தது.

இங்கே தூங்காமை என்பதற்கு இன்னொரு பொருளும் இயம்பலாம். அதாவது எதிலும் எப்போதும் கண்ணும் கருத்துமாய், கவனமாய், விழிப்புடன் இருத்தல் என்பதே அப்பொருள், அதாவது ஏமாந்து போகாதிருத்தல் என்பது பொருள். உலக வழக்கில், தன் உடைமையைப் பிறர்பால் இழந்த ஒருவனை நோக்கி, 'நீ தூங்கிக் கொண்டிருந்தாய்; அதனால் அவன் அடித்துக்கொண்டு போய் விட்டான்' - என்று கூறுவது வழக்கம். இவன் ஒன்றும் தூங்கவில்லை, கவனமின்றி இருந்தான்; அதனால் ஏமாந்து போனான். அவ்வளவுதான். இங்கும் அதே கருத்துத்தான்.

அக்காலத்தில் ஊருக்கு ஊர் அரசர்கள் இருந்தனர். தூங்குபவனது ஆட்சியை அடுத்தவன் தட்டிக்கொண்டு போய் விடுவான். அதனால் அரசர்கள் எப்போதும் விழிப்புடன் இருத்தல் வேண்டும், அரசர் இல்லாத இக்காலத்திலோ - அதாவது, கட்சிக்காரர்கள் ஆளுகின்ற இக்காலத்திலோ, ஆளுங்கட்சிக்காரன் தூங்கினால், அயல்கட்சிக்காரன் பதவியைப் பறித்துக்கொள்வான். அதனாலேயே ஒவ்வொரு கட்சிக்காரரும் கண்ணுக்கு விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு விழிப்புடன் இருப்பது வழக்கம். அது கிடக்க! பாராண்ட பழந்தமிழ் மன்னரின் பரம்பரை எங்கே? எங்கே? ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே அது அழிந்து ஒழிந்து விட்டதே! அந்தோ ஐயோ, அது அழிந்து ஒழிந்து விட்டதே! ஏன், என்ன காரணம்? பிற்காலத் தமிழ் மன்னரின் பெருந்தூக்கமே.! ஆமாம்,