பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

63


அரசன் அறன் இழுக்கினும் மானம் போம்; அல்லவை நீக்காவிடினும் மானம் போம்; மறன் இழுக்கினும் மானம் போம். எனவே, அறன் இழுக்காமையும் மானம் உடைமை தான்; அல்லவை நீக்குதலும் மானம் உடைமைதான்; மறன் இழுக்காமையும் மானம் உடைமைதான், இன்னுங் கேட்டால், இந்த எல்லாப் பண்புகளும் அமைந்திருப்பதே மானம் உடைமையாகும்.

முதலில், அம்மானத்தின் கூறாகிய அறன் இழுக்காமையைப் பார்ப்போம். அரசன் தான் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறியிலிருந்து - கடமைகளிலிருந்து தவறாது நடத்தலே அறனிழுக்காத மானம் ஆகும். அரசனின் கடமைகள் முன்னும் பின்னும் பரக்கப் பேசப்பட்டுள்ளன. ஆங்காங்கே கண்டுகொள்க. ஒருவன் தன் கடமைகளிலிருந்து வழுவுவானேயாயின் - தான் பின்பற்றவேண்டிய நல்லொழுக்கக் கடப்பாட்டிலிருந்து தவறுவானே யாயின், அவன் தடம் புரண்ட புகைவண்டியாகி விடுகிறான். அவனை மானம் உடையவன் என்று எவ்வாறு உலகம் மதிக்கும்? 'மானங்கெட்ட வனே' என்று வைத்தான் செய்யும்.

அடுத்தது, அல்லவை நீக்கும் மானம் உடைமையாம். நல்லவை என்னும் சொல்லின் எதிர்மொழியே அல்லவை என்பது, அதாவது தீயவை என்று பொருள், இச் சொல் வழக்கை, "நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்" என்னும் புறநானூற்றுப் (195) பாடல் பகுதியாலும் உணரலாம். அரசன் தான்மட்டும் அறநெறி பிறழாது கடைப்பிடித்தால் போதாது; அறநெறி யல்லாத தீமைகளைத் தன் நாட்டினின்றும் - நாட்டு மக்களினின்றும் நீக்கவேண்டும். ஒரு நாட்டு மக்களிடையே தீய எண்ணங்களும் - தீய செயல்களும் நிறைந்திருப்பின், உலகம் அந்நாட்டின் தலைவனைக் காறித் துப்பி எள்ளி