உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

75


"தண்டலை தன்னில் தலைப்பட்ட நாளில் தலைவனைநாம்
கண்டது கொண்டல்லவோ என்று போலுங்கலுழ் கின்றதே"

என்னும் அம்பிகாபதிகோவைச் (338) செய்யுளால் அறியலாம். உறுப்புகளின் ஒற்றுமைக்காக இங்கே இது எடுத்துக் காட்டப்பட்டது.

மன்னிக்கவும்! வடமொழியில் காளிதாசனது கைப்புனைவு ஒன்று இங்கே நினைவிற்கு வருகின்றது . அதையுங்கூற ஒப்புதலளிக்க வேண்டுகிறேன். ஒரு பெண் ஒரு நீர்த் துறையில் தன் மார்புக்கச்சைக் கல்லில் அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தாள். அதனைக் கண்டு கற்பனை செய்கிறான் காளிதாசன். அந்தக் கச்சானது, மார்பிலுள்ள கொங்கைகளைக் கட்டியடக்கிச் சிறைப்படுத்தி இவ்வளவு நேரம் வருத்திற்றாம். அக்கொடுமையைக் கண்டு பொறுக்க முடியாத கைகள், அந்தக் கச்சினைக் கல்லில் அடித்துப் பழிக்குப்பழி வாங்கினவாம். அடிவாங்குபவன் சோர்ந்து விழுந்துவிடாமல் இருப்பதற்காகத் தண்ணீர் கொடுத்துக் கொடுத்து அடிப்பதைப் போல, அந்தக் கச்சைத் தண்ணீரில் நனைத்து நனைத்துக் கைகள் அடித்தனவாம். இஃதுமோர் இலக்கிய இன்பம், அவ்வளவுதான்! இதுவும் உறுப்புகளின் ஒற்றுமைக்காக இங்கே எடுத்துக் காட்டப்பட்டது!

அம்பிகாபதி கோவையின்படி கண் கைகளின் சோர்வுக்காக அழுதிருப்பதும், காளிதாசனது கவியின்படி கொங்கைகளுக்காகக் கைகள் கச்சினைக் கல்லில் அடித்திருப்பதும், 'தும்பை விட்டுக் கொம்பைப் பிடிப்பதுபோல்', இப்பிறவியில் விட்டு மறு பிறப்பில் வருத்துவது போல, முதலில் விட்டுப் பின்னர்ச் செயலாற்றும் மடிமையாகும். ஆனால், புருவம் முதலிலிருந்தே கண்ணோடு ஒத்துழைப்பதாகக் கற்பனை செய்து காட்டியுள்ள வள்ளுவர்க்குக் கைம்மாறு யாதோ?