பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

ஆழ்கடலில்


அறிவு பெற்றவர் அனைவரும் உணர்வர். இந்தத் திறமையில்லாமல், மக்களது சொந்த முயற்சியால் மட்டும் கிடைக்கும் பொருள்களைச் சுரண்டிச் சுருட்டிக் கொண்டு 'தாம் தீம்' பண்ணி ஆரவாரமாய்ப் பொழுது கழிக்கும் அரசன் எதற்கு? அதற்கு, சீட்டாட்டத்தில் வரும் அட்டைப் பட 'ஆடுதன் ராசா'வே போதுமே! இத்தகையோனை மக்கள் மன்னனாக மதித்து ஏற்றுக்கொள்வரா? மனைவி எவ்வளவுதான் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு உடையவளாயினும், 'கல்லானாலும் கணவன் - புல்லானாலும் புருழ்சன்' என்ற 'மூலமந்திரத்தை' நாடோறும் ஆயிரத்தெட்டு உருப்போடுபவளாக இருப்பினும், வருமானம் இல்லாத --- துப்புக்கெட்ட கணவனை நோக்கி, ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்காவது, 'நீ வெட்டுகிற வெட்டுக்கு இது வேறா?' என்று சுட்டிக் காட்டித் திட்டி மட்டந்தட்ட மாட்டாளா? இதே விருது தான் ஆக்கத் தெரியாத அரசியல் தலைவனுக்கும்! இது குறித்தே 'வல்லது அரசு' என 'வல்லது' என்னுஞ் சொல்லை வள்ளுவர் பெய்துள்ளார். இதுவே பெரிய வல்லமை போலும்! இனி இவ்வல்லமையின் உட்பிரிவு ஒவ்வொன்றினையும் ஒரு சிறிது ஊன்றி நோக்குவோம்: இக்குறளில், இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் என நான்கு நிலைகள் பேசப்பட்டுள்ளன. இவை ஒன்றுக்கொன்று இளைத்தனவல்ல; ஒத்தன; ஒன்றோடொன்று தொடர்புடையன. இவற்றுள் ஒன்றின்றி ஒன்றில்லை என்னலாம். ஏன்? ஏனா? 'ஆண்டிமடங்கட்டுவது' போல ஏட்டில் திட்டங்களைத் தீட்டி விட்டால் போதுமா? அவற்றைச் செயல்முறைக்குக் கொண்டுவரவேண்டும். கொண்டு வந்தும், 'புசுபுசு வாணம்' போல் புகைந்து விட்டால் போதுமா? போதிய அளவுக்கு மேலும் பொருள்கள் உருப்படியாகவேண்டும். பொருள்கள் உருவானால்