பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

ஆழ்கடலில்


இல்வாழ்க்கையாகும். பெரும்பான்மையோர்க்கு அறத்தாற்று இல்வாழ்க்கையில் இன்பமோ, பெருமையோ, விறுவிறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை; அன்னோர்க்குப் புறத்தாற்று இல்வாழ்க்கையிலேயே பூரிப்புப் பொங்குகிறது: இன்பங் கொழுந்து விடுகிறது; விறுவிறுப்பு முறுக்கேறுகிறது. ஆனால், புறத்தாற்று இல்வாழ்க்கை முதலில் முன்னேற்றமாய்த் தென்படினும் பின்னர்க் கவிழ்த்து விடும்; ஆதலின் அறத்தாறே என்றும் நின்று நிலைத்து நீடிக்கும் என எச்சரிக்கின்றது இந்தக் குறள்.

(மணக்குடவர் உரை) இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின், புறநெறியாகிய தவத்தில் போய்ப் பெறுவது யாதோ?

(பரிமேலழகர் உரை) ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவனாயின், அவன் அதற்குப் புறமாகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? புறத்தாறு -- இல்லைவிட்டு வனத்துச் செல்லு நிலை.

(ஆராய்ச்சி விரிவுரை) இந்தக் குறளில் அறத்தாறு புறத்தாறு என இரண்டு நெறிகள் பேசப்பட்டுள்ளன. அறநெறிக்குப் புறநெறி (எதிர்மாறான நெறி) மறநெறி (தீய வழிகள்) என இயற்கையாய்ச் சொல்லமைப்பு - தொடர் அமைப்புகளை ஒட்டி யான் உரை எழுதினேன். ஆனால் பழைய உரையாசிரியர்கள், இங்கே எனக்கு மேல் பெரும் புரட்சிப் பொருள் புகன்றுள்ளனர். அவர்தம் துணிவைப் பாராட்டுகிறேன், புறத்தாறு என்பதற்கு, இல்லற வாழ்க்கைக்குப் புறம்பான துறவற வாழ்க்கை - தவவாழ்க்கை என அவர்கள் பொருள் எழுதியுள்ளனர். நல்லமுறையில் இல்வாழ்க்கை நடத்தினால், துறவறத்திற்குச் சென்றுதான் தீரவேண்டும் என்பது கட்டாயம் இல்லை; துறவறத்திற்குச் சென்று பெறக்கூடிய நன்மை