பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

7


இனிக்கிறது; தேருந்தோறும் அமிழ்தாகின்ற செந்தமிழைப் போல, இவள் செங்கனிவாய் ஆருந்தோறும் அமிழ்தாகின்றது'- என்பதுதான் அவன் செம் மொழி.

இப்பொருள் செறிந்த உவமையில் எத்துணை உண்மை பொதிந்து கிடக்கின்றது! இக்கருத்து எத்துணை ஆழமுடையது. எத்துணை அகலமுடையது, எத்துணை உயர்ச்சியுடையது! இஃது எங்கிருந்து பெறப்பட்டது? இங்கிருந்து தான்:--

தேருந்தொறும் இனிதாந் தமிழ்போன்று இவள்
செங்கனிவாய்
ஆருந்தொறும் இனிதாய் அமிழ்தாம் என தாருயிர்க்கே"
(தஞ்சை வாணன் கோவை-59)

என்னுஞ் செய்யுட் பகுதியிலிருந்துதான். இச் செய்யுள் எவர் வாயிலிருந்து வந்தது? "பொய் பிறந்தது புலவர் வாயிலே" என்பர் சிலர், இல்லையில்லை; புலவர்கட்குள்ளேயே பொய்யாமொழிப் புலவர் பாடிய செய்யுள் இது. ஈடுபாடு கொள்ள ஈடுபாடு கொள்ளத் தமிழ் மிக மிக இனிக்கும் என்பது முடிந்த கருத்து. தமிழில் ஈடுபாடு கொண்டவர்கள் இதனை உணர்வர், நம்புவர், கற்கண்டின் இனிமையைச் சுவைத்தே உணரவேண்டும், உணரமுடியும் அல்லவா?

பொய்யாமொழிப் புலவர் பெண் இன்பத்திற்கும் தமிழ் இன்பத்திற்கும் ஒத்தநிலை தந்துள்ளார். பாரதிதாசனோ,

மங்கை ஒருத்தி தரும் சுகமும் - எங்கள்
மாதமிழ்க்கு ஈடு இல்லை"

எனத் தமிழின்பத்தை உயர்த்தியுள்ளார்.