பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

ஆழ்கடலில்


(மணக்குடவர் உரை) இவ்வொள்ளிய நுதற்கு மிகவுங் கெட்டது போரின்கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி.

(பரிமேலழகர் உரை) போர்க்களத்து வந்து நேராது பகைவரும் நேர்ந்தார் வாய்க் கேட்டஞ்சுதற் கேதுவாய என்வலி, இம்மாதர தொள்ளிய நுதலொன்றற்குமே அழிந்து விட்டது.

(ஆராய்ச்சி விரிவுரை), ஆசிரியர் இந்தக் குறளில் உயிர் இயல்புகளுள் ஒன்றினைப் பிழிந்து வைத்துள்ளார். இக் குறளைப் படிக்குங்கால், அந்தக் கருத்தே என் நெஞ்சை அள்ளுகிறது. உயிர்களின் உள்ள இயல்பை இங்கே ஒளிப்பதில் ஒரு சிறிதும் பயனில்லை; தெள்ளென எடுத்துக் காட்டுவல், காலனுக்கும் அஞ்சாத கடுங்கண் மறவர்கள் கூட, கருத்துக்கினிய காதல் நல்லாரிடம், வறுக்குஞ் சட்டியில் இட்ட வெண்டைக்காய் போல வாடி வதங்கிச் சுருண்டு மடங்கி விடுகின்றனரே! பறவை, விலங்குகளினிடமும் இவ்வியல்பைக் காணலாம். இஃதோர் உயிரியல்பு. இன உணக்கங்களுள் ஒன்றாகிய 'காதல் ஊக்கம்' (Mating) என உள நூலார் இதனைக் குறிப்பிட்டிருப்பது நினைவு கூரத்தக்கது. போர்க்களத்தில் பகைவர்களையெல்லாம் கலங்கச் செய்யும் பேராண்மையுறு தலைமகன், ஒரு பெண்ணின் நெற்றியழகுக்கு உடைந்தே போன எளிமையை என்னென்பது! 'அலுவலகத்தில் ஆரவாரஞ் செய்கின்ற ஐயா அடுப்பங்கரையில் அம்மாவிடம் அடக்கத்தான்' என்று உலகியலில் பேசப்படுவதும் இந்தக் கருத்தைத் தழுவியது தானோ?

காதல் சுவையில் விறுவிறுப்புடையவர்கள் இந்தக் குறளை ஊன்றிக் கவனிக்கவேண்டும். இன்று சில நாடகக் கதைகளாலும் நாட்டியங்களாலும் பரப்பப்படுகின்ற நாய்க் காதல் அன்று இக்குறளில் சொல்லப்படுங் காதல். பகைவர்களை முறியடித்துத் தாய் நாட்டுக்குத் தொண்டாற்றும்