பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆணிமுத்துகள்
97
 

அதனால்தான் 'வல்லாற்கு'. (வல்லவனுக்கு என்றார். இனி அடுத்த தொடருக்குச் செல்வாம்:-

'தன் சொலால் தான் கண்டனைத்து இவ்வுலகு' என்பதில், உலகு என்பதற்கு முன்னுள்ள 'இ' (இ + உலகு = இவ்வுலகு = இந்த உலகம்) என்னும் சுட்டு, வள்ளுவர் நம் பக்கத்தில் இருந்து கொண்டு இந்த இருபதாம் நூற்றாண்டைச் சுட்டிக்காட்டுவது போல் காணப்படுகின்றது. அதாவது, இந்த உலகம் - ஒருவரையொருவர் மதிக்காமல், ஒருவர்க்கொருவர் கட்டுப்படாமல், ஒருவரோடொருவர் பொறாமையுடன் போட்டியிட்டுப் போர் செய்து கொள்கின்ற இந்த உலகமுங்கூட, இன்சொலால் ஈத்தளிக்க வல்லானுக்கு அடங்கிக் கட்டுப்படும் - என்னும் நுண் பொருளை இந்த 'இ' (இவ்வுலகு) என்ற ஒரு சுட்டெழுத்து அறிவிக்கவில்லையா?

'தன் சொலால்' என்பது தான் சொல்லுகிறபடி நடக்கும் என்பதைக் குறிக்கிறது. 'அவர் சொல்லுக்கு அங்கே நிறைய மதிப்பு உண்டு', 'அவர் சொல்லுக்கு அங்கே இரண்டாவது இல்லை', 'அவர் சொன்னால் போதும்', 'அவர் சொன்னால் சொன்னதுதான்', 'அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்' ஆகிய உலக வழக்குகள் இதே கருத்தை அறிவிப்பனவேயாம். அடுத்து, 'தான் கண்டனைத்து' என்பது. தான் கருதுகிறபடி - எண்ணுகிறபடியே உலகமும் நடக்கும் என்பது இதன் பொருள். இங்கே உளநூல் (Psychology) கருத்து ஒன்று என் உள்ளத்தை உந்துகின்றது. அதனைச் சுருங்கத் தருகிறேன் :- மக்களுக்கு இளமையிலிருந்தே - இயற்கையிலேயே சில பொதுவான மனப்போக்குகள்' (General Tendencies ) உள்ளன. அவற்றுள், ஒத்துணர்வு (Sympathy), குறிப்பு உணர்தல் (Suggestion), பின்பற்றல் (Imitation)