பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

6


அவருடைய கவிதைகள், கட்டுரைகள், பாரத நாட்டின் அரசியல் விடுதலையையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமுதாய சீர்திருத்தத்தையும் சமத்துவத்தையும், வற்புறுத்தின. கல்விப் பெருக்கையும், கலைப் பெருக்கையும் வலியுறுத்தின. கல்லாமையையும், அறியாமையையும், கலாச்சார சீரழிவையும் எதிர்த்தன. செல்வமும் கல்வியும் அறிவும் ஆற்றலும் பாரதத்தில் பெருக வேண்டும் என்று வேண்டின.

பாரதப் பண்பாட்டில் வேரூன்றி, காலூன்றி உறுதியாக நின்று புதிய பாரதத்தை பாரதி அழைத்தார்.

பாரதி கண்ணனின் உலக வடிவையும், உலக வடிவிலான கண்ணனையும் வரவேற்றார், பாராட்டினார், வணங்கினார், வழிபட்டார். தேச பக்தியுடன் தெய்வ பக்தியை இணைத்தார்.

ஆழ்வார் பள்ளி கொண்ட பெருமாளைத் தட்டி எழுப்புவதற்குத் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடியதை நினைத்தார். ஆழ்ந்த உரக்கத்திலுள்ள பாரத மக்களைத் தட்டி எழுப்பிச் சுதந்திர உணர்வை ஊட்டி எழுச்சி பெறச் செய்வதற்காக பாரதி, பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி பாடினார்.

பாரத தேசம் விடுதலை பெறுவதற்கும், பெற்ற விடுதலையைப் பேணிக் காப்பதற்கும், நாடு வளர்ச்சி பெற்று முன்னேற்றம் காண்பதற்கும் நாட்டு மக்களுடைய ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிகவும் அவசியமாகும். சாதி மத வேறுபாடுகளும் பாகுபாடுகளும் நீங்கி இந்திய மக்கள் ஒன்று பட்டு நின்று செயல்பட வேண்டும். பாரதி இந்திய மக்களின் ஒற்றுமைக்காக பாடினார். சாதி மத வேறுபாடுகள் நீங்கப் பாடினார். பெண்ணடிமை நீங்கி, பெண்கள் விடுதலைப் பெறப்பாடினார்.

நாடும் மக்களும் நலம் பெறப் பாடினார். அச்சம் தீரவும், அமுதம் விளையவும், வித்தைகள் வளரவும் வேள்விகள் ஓங்கவும், மக்கள் அமரத்தன்மை எய்தவும் பாடினார்.