பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5.நாடும் மக்களும் நலம் பெற


ஆழ்வார்கள் தலை சிறந்த மனிதர்களாக மனிதப் பண்புகள் நிறைந்தவர்களாக, மனிதாபிமானம் நிறைந்தவர்களாக வாழ்ந்தார்கள். அவர்கள் அன்பும், கருணையும், பண்பும், பக்தியும், அபிமானமும், சீலமும் வாழ்க்கைக் கட்டுப்பாடுகளும், நெறிமுறைகளும், ஒழுக்கமும், உறுதிப்பாடும், வைராக்கியமும், பற்றும், பாசமும் நிறைந்தவர்களாக விளங்கினர். மக்கள் மீது அதிகமான அன்பும், பாசமும் கொண்டிருந்தனர். திருமாலிடம் அளவு கடந்த பக்தி செலுத்தி பிறவித்துன்பத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும், உலக மக்களுக்கு வாழ்க்கைத் துன்பங்கள் நீங்கவும் விரும்பினர். அதே சமயத்தில் தங்களுக்கு ஏற்படும் இன்பம் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று விரும்பினர். ஆழ்வார்கள் மனித வாழ்க்கையை நன்கு அனுபவித்தனர். எல்லோருக்கும் இன்பகரமான நல்வாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்பினார்கள்.

“நெய்யிடை நல்லதோர் சோறும்
நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப்
பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும்
தந்தென்னை வெள்ளுயிராக்க வல்ல
மையுடை நாகப்பகைக் கொடியானு
க்குப் பல்லாண்டு கூறுதுமே”

என்று பெரியாழ்வார் நயம்படப் பாடியுள்ளார்.