பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5.நாடும் மக்களும் நலம் பெற

102


திருமங்கையாழ்வார் மிகவும் சிறந்த புகழ் மிகுந்த ஆழ்வாராவார். அவருடைய வாழ்க்கை வேகமும் விறுவிறுப்பும் நிறைந்ததாகும். அவருடைய பாடல்களும் வேகமும் விறுவிறுப்பும், ஆழ்ந்த அனுபவ ஞானமும் நிறைந்ததாக இருக்கின்றன. அவர் நாலாயிரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். பெரும்பாலான திவ்ய தேசங்களுக்குச் சென்று மங்கள சாசனம் செய்துள்ளார். திருவரங்கத்தில் பெரும் அளவில் திருப்பணிகள் செய்துள்ளார். அவருடைய வாடினேன் வாடி என்று தொடங்கும் பத்து பாடல்களும் முதன்மை பெற்றதாகும். நாராயணாவென்னும் நாமத்தின் உட் பொருளையும் அதன் பெரும் பயனையும் உணர்ந்து அவர் அப்பாடல்களை உயிர்த் துடிப்புடன் பாடுகிறார். இந்த நாராயண நாமத்தை உச்சரித்தால் துயர்கள் நீங்கும், நன்மைகள் பெருகும், என்று ஆழ்வார் பாடுகிறார். நாராயணா வென்னும் நாமத்தை உச்சரித்தால் இப்பிறப்பின் பெரும் துயர் தீரும். சேமம் சேரும், தீவினைகள் போகும் என்று கூறுகிறார்.

குலம் தரும் செல்வம் தந்திடும் துயரமெல்லாம் தீரும். நிலம் தரம் செய்யும், நீள் விசும்பருளும் அருளுடன் பெருநிலம் அளிக்கும் வலம் தரும், மற்றும் எல்லா வகை நல்லனவும் செய்யும். பெற்ற தாயைப் போல் நமக்கு அனைத்தையும் அளிக்கும். நலம் தரும் அச் சொல்லே நாராயணா வென்னும் நாமமாகும் என்று ஆழ்வார் உணர்ச்சி பொங்க அழுத்தமாகச் கூறுகிறார்.

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீண் விசும் பருளும்
அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்