பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

7


மண் மீதுள்ள மக்கள் பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு மரங்கள் யாவும் இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடப் பாடினார். கிருதயுகத்தைக் கேடின்றி நிறுத்தப்பாடினார்.

செல்வமெட்டும் எய்தி, செம்மை ஏறி, இல்லை என்னும் கொடுமை உலகில் இல்லையாக்கப் பாடினார். கல்வியும் கலைகளும், பாட்டும் பண்ணும், ஆடல்களும், பாடல்களும் பெருகப்பாடினார். வறுமையென்பதை மண்மிசைமாய்ப்பேன் என்று பாடினார்.

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலை எய்தவும் பாடினார். "திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும், தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வம் இந்த நாட்டிலே" என்று பாடினார்.

ஆழ்வார்களைப் போலவே பாரதியும் கண்ணன் மீது அளவு கடந்த பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்தார். கண்ணனைப் பலவாறாக வடித்துப் பாடினார். பாரதியின் கண்ணன் பாட்டு ஒரு தனி இலக்கியமாகும்.

கண்ணன் பாட்டு என்னும் தனித் தொகுதியில் கண்ணன் என் தோழன், கண்ணன்-என் தாய், கண்ணன்-என் சேவகன், கண்ணன்-என் அரசன்,கண்ணன் என் சீடன், கண்ணன்-என்சற்குரு, கண்ணம்மா-என் குழந்தை, கண்ணன்-என் விளையாட்டுப்பிள்ளை, கண்ணன்-என் காதலன், கண்ணன்-என் காந்தன், கண்ணம்மா-என் காதலி, கண்ணன்-என் ஆண்டான், கண்ணம்மா என் குலதெய்வம் என்று கண்ணனைப் பற்றிப் பாரதி பல பரிமாணங்களிலும் பாடுகிறார். அத்துடன் தோத்திரப் பாடல் தொகுதியிலும் கண்ணன் பிறப்பு, கண்ணன் வரவு, கண்ணன் துதி, கண்ணம்மா, என்னும் தலைப்புகளிலும் பாரதியின் பாடல்கள் வெளிவந்துள்ளன.

ஆழ்வார்களுக்கும் பாரதிக்கும் ஒப்பீடான பல கருத்துக்களையும் அதே சமயத்தில் இருவருக்கும் உள்ள