பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும்-அ.சீனிவாசன்

109


ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவன்தொழிலாம்
துன்பமே இயற்கை யெனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்

என்று ஒரு புதிய கருத்தை முன் வைத்து பாரதி பாடுகிறார்.

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
நானிலத்தவர் மேனிலை யெய்தவும்
பாட்டிலே தனி இன்பத்தை நாட்டவும்
பண்ணிலே களி கூட்டவும் வேண்டி, நான்
மூட்டும் அன்புக் கனலோடு வாணியை
முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல்
காட்டி அன்னை பராசக்தி யேழையேன்
கவிதை யாவும் தனக்கெனக் கேட்கிறாள்.


என்று பாரதி சுவைப்படப் பாடி மகிழ்கிறார்.

பாரதி, நாட்டிலும் உலகிலும் உள்ள எல்லா தெய்வங்களையும் பற்றிப் பாடினார். கடைசியில் அறிவே தெய்வம் என்றும் கூறினார். ஆயினும் பாரதி கண்ணனைப் பற்றி அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். ஆழ்வார்கள் திருமாலைப் பற்றி மட்டும் பாடினார்கள். அது அவர்களுடைய தனிச் சமயம். பாரதி அவ்வாறான தனிச் சமயத்திற்கப்பாற் பட்டவராக இருந்தார். ஆயினும் இந்து தர்மத்திற்கும் பாரதப் பண்பாட்டிற்கும் சார்ந்தே அவருடைய தேசபக்தியும் தெய்வ பக்தியும் வழிபாடும் நம்பிக்கையும், ஆன்மீக நிலையும் தத்துவ நிலையும் இருந்தது. கண்ணனைத் தனது குல தெய்வமாக வரித்துக் கொண்டார். சக்தி வடிவத்தைப் போற்றினார். சக்திதாசன் என்று பெயர் பெற்றார். எந்த தெய்வத்தை அவர் குறிப்பிட்டாலும் தேச நலனும் உலக நலனும் அவருக்கு மய்யக் கருத்தாக அமைந்திருந்தது.