பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ.சீனிவாசன்

123


வாழ்க்கை நலன்களைப் பாதுகாத்தல், மனிதனுடைய உடல் அமைப்பில் உள்ள நாடிகள், அவைகளில் வாதம் பித்தம் சிலேத்துமம் ஆகியவற்றின் செயல்பாடுகள், அவைகளில் ஏற்படும் பாதிப்புகளால் உண்டாகும் வியாதிகள், அந்த நோய்களிலிருந்து மனிதனையும், மக்களையும் இதர உயிரினங்களையும் காத்தல் முதலிய எண்ணற்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் அறிய கருத்துக்கள் நிரம்பிய, தீஞ்சுவைத் தமிழ் பாடல்கள், அவற்றின் இசைச்சிறப்புகள், இலக்கியச் சிறப்புகள், பக்திச்சுவை ஆகிய நிறைகள் நிறைந்த அருமையான பாடல்களாக அமைந்துள்ளன.

ஆண்டாள்


பெரியாழ்வாரின் திருமகள் ஆண்டாள். அவர் ஆழ்வார்களில் ஒருவர். பெண்பாற் புலவர். அவர் பாடியுள்ள பாடல்களில் திருப்பாவை என்னும் சங்கத் தமிழ்மாலை முப்பதும் மிகவும் பிரபலமானவை. மார்கழி மாதம் நாள் தோறும் ஊர் தோறும், கோயில்கள் தோறும் பாடப் பெறுபவை. திருப்பாவைப் பாடல்களில் கோதை என்னும் ஆண்டாள் திருமாலைப்பற்றி அதில் சிறப்பாகக் கண்ண பிரானைப் பற்றி அதிகமாக ஈடுபட்டுப் பாடியுள்ளதைக் காண்கிறோம்.

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் என்றும், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் என்றும், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் என்றும், மாயனை மன்னு வட மதுரை மைந்தனை என்றும், தூய பெருநீர் யமுனைத் துறைவனை என்றும், ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை எனவும், பேய் முலை நஞ்சுண்டு, கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை எனவும் மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை எனவும், புள்ளின் வாய்க் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானை என்றும் வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனை எனவும்,