பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள்

124


அம்பரமே, தண்ணீரே, சோறே அறம் செய்யும் எம் பெருமான் நந்த கோபாலா என்றும், ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே, எனவும், பொன்றச்சகடமுதைத் தாய் புகழ் போற்றி என்றும் கன்று குனிலாவெறிந்தாய் கழல் போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்றும்,

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப் பன்ன நின்ற நெடுமாலே எனவும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா எனவும், குறைவொன்றுமில்லாத கோவிந்தா எனவும், இற்றைப் பறை கொள்வானன்று காண் கோவிந்தா, என்றெல்லாம் தனது பாவைப் பாடல்களில் கண்ணனைச் சிறப்பித்துப் பட்டர் பிரான் கோதை குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

ஆண்டாள் கண்ணனிடம் பக்தி மட்டும் செலுத்தவில்லை. கண்ணனுடன் இரண்டறக் கலக்கவும், கண்ணனுடன் ஐக்கியமாகி விடவும் விரும்பினாள். கண்ணனையே தன் மணாளனாக விரும்பி அவனை அடைவதற்காக நோன்பிருந்தாள். பூஜை செய்தாள், பாடினாள், ஆடினாள், அவள் எந்த வேலை செய்தாலும் அதில் கண்ணனையே கண்டாள். கண்ணன் மூலம் உலக கூேடிமத்தை விரும்பினாள். பசுக் கூட்டங்கள் பெருக வேண்டும். பால் பெருக வேண்டும். பாலும் தயிரும் வெண்ணையும் நெய்யும் பெருக வேண்டும். மாதம் மும்மாரி மழை பொழிய வேண்டும். உலக மக்கள் எல்லாம் இன்புற்றிருக்க வேண்டும். நன் மக்களைப் பெற வேண்டும். அத்தனை பாவங்களும் துன்பங்களும் நீங்கி அனைவரும் வைகுண்டம் அடைய வேண்டும் என்று விரும்புகிறாள், பாடுகிறாள். திவ்யப் பிரபந்தப் பாடல்களில் ஆண்டாள் பாசுரங்கள் தனிச் சிறப்பு கொண்டவை.