பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

12


திருமாலின் இராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சகாப்தமாகும். ஒவ்வொரு யுகச் சிறப்பையும் பெற்றதாகும். இந்த அவதாரங்களில் இராமபிரானும், கண்ணபிரானும் செய்யும் செயற்கரிய காரியங்கள் அனைத்தும் மனிதனுடைய தனி வாழ்க்கையுடனும், சமுதாய வாழ்க்கையுடனும் உலகச் செயல்பாடுகளுடனும் மிகவும் நெருக்கமாகத் தொடர்புகள் கொண்டனவாக உள்ளதை ஆழ்வார்கள் மிகவும் தெளிவுபடவும், விரிவுபடவும் பாடியிருக்கிறார்கள்.

திருமாலின் திரு அவதாரச் சிறப்புகளைப் பற்றிக் கண்ணனே பகவத் கீதையில் சிறப்பித்துக் கூறியுள்ள வாசகங்கள் மிகவும் பிரசித்தமானவை.

பாரதியாரின் பகவத் கீதை மொழி பெயர்ப்பில், அவர் தமிழில் அவ்வாசகங்களை மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். அந்தப் பிரசித்தி பெற்ற வாசகங்கள் தமிழில்,

“பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்து போய் அதருமம் எழுச்சி பெருமோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன்.”

“நல்லோரைக் காக்கவும் தீயன செய்வோரை அழிக்கவும் அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்” என்பதை உலகம் நன்கறியும்.

தீயோரை மாய்த்து நல்லோரைக் காத்து அறத்தை நிலைநிறுத்தும் அந்த மகத்தான யுகக்கடமை மனித சமுதாயத்திற்கு நம்பிக்கை தறுவதாகும். சோர்வைப் போக்கி, புதிய நம்பிக்கையைக் கொடுத்து செயலில் ஊக்கத்தையும் தெம்பையும் அளித்து மக்களைத்தட்டி எழுப்பும் இந்த மகத்தான வாசகங்கள்