பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ.சீனிவாசன்

16


நீக்கலும் என முத்தொழிலையும் அலகிலா விளையாட்டுடையவராக, அவரைத் தலைவராகவே சிறப்புறக் கம்பநாடர் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

ஆண்டவனை நாம் தேடிச் செல்லவேண்டியதில்லை. கோவிலுக்குப் போவது கூடாது என்பதல்ல. கோவிலுக்குச் செல்லும் போது நமது மனதில் ஒருமைப்பாடு, ஒரு குவிந்த நிலைபாடு ஏற்படுகிறது. ஆயினும் ஆண்டவனே பக்தனைத் தேடிச்செல்வதே வைணவத்தின் தனிச்சிறப்பாகும். இராமபிரான் குகனையும், அகலிகையையும், சுக்கிரீவனையும், சபரியையும், வீடணனையும் தேடிச் சென்றதையும் காண்கிறோம். திருமங்கை மன்னனை ரீமன் நாரயணனே தேடிச் சென்று நாராயண நாமத்தைக் கண்டு கொள்ளச் செய்ததைக் காண்கிறோம்.

பக்தனுடைய குரலுக்குச் செவி சாய்க்கும் கண்ணனை, அவன் பெருமையை ஆழ்வார்கள் வியந்து வியந்து பாராட்டியிருக்கிறார்கள். சோதனைகள் என்பது இயற்கையின் விளையாட்டு, அந்தச் சோதனைகளிலிருந்து மனிதனைக் கரை சேர்க்கிறது நாராயண மந்திரம்.

இந்தப் பேருண்மையை உலகிற்குத் தெளிவு படுத்தவே பாரதி பாஞ்சாலி சபதத்தைப் பாடினான். கண்ணனின் சிறப்பை, அக்கண்ணனின் பெருமையை வெளிப்படுத்தக் கண்ணனிடத்திலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, கீதையைத் தமிழில் பாரதி மொழியாக்கம் செய்து அதற்கு ஒரு அற்புதமான முன்னுரையையும் எழுதி திருமாலின் பெருமையை விளக்கிக் கூறுகிறார்.

திருமாலின் தனிச்சிறப்புகளில் ஒன்று அவருடைய நின்ற வண்ணமும் கிடந்த வண்ணமும் ஆகும். சயனம் திருமாலின்