பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி

ஆழ்வார்களுக்கடுத்தப் படியாகக் கண்ணனைப் பற்றிப் பாரதி அதிகமாகப் பாடியுள்ளார். மகாகவி பாரதி ஒரு தலை சிறந்த தேசீய’ மகா கவி. அவருடைய அனைத்துப் பாடல்களிலும் பாரதத்தின் அரசியல், சமுதாய, பொருளாதார, ஆன்மீக, தெய்வீகப் பண்பாட்டுக் கருத்துக்களும் தத்துவங்களும் ஊடுறுவி, ஒளிவீசுவதைக் காணலாம்.

மகாகவி பாரதி தன்னுடைய பலவேறு பாடல்களிலும் கண்ணனைக் குறிப்பிடுகிறார். பாரதியின் அனைத்துப் பாடல்களிலும் கண்ணனைக் காண்கிறோம். அத்துடன் பாரதியின் பாடல் தொகுதியில் கண்ணன் பாட்டு என்னும் பாடல் தொகுதி தனி இடம் பெற்றிருக்கிறது. மேலும் தனது பாஞ்சாலி சபதத்தில் பாரதி கண்ணனின் பெருமையைப் பற்றி மிக அற்புதமாகப் பாடுகிறார். பாரதியின் உள்ளத்தில் கண்ணன் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார்.

கண்ணன் பாட்டுக்கு முகவுரை எழுதிய பரலி சு. நெல்லையப்ப பிள்ளை தனது முகவுரையில் “பாரதியாருக்குக் கண்ணபிரான் மீ துள்ள அதிதீவிர பக்தி காரணமாக இந்நூலில் உள்ள பாடல்கள் வெளியாயின. இவை தமிழர்களுக்கு நல்விருந்தாகும்” என்று குறிப்பிடுகிறார். வ.வே.சு அய்யர் தனது முன்னுரையில் “பாரத நாட்டின் குல தெய்வமாகி விட்ட கண்ணனுக்குப் பாமாலை சூட்டாத கவிகள் அருமை. தன்னை நெடுநாட்களாக மறந்திருந்த பாரத நாடு தீடிரென விழித்துக் கொண்டதும் அதன் எதிரே முதலில் தோன்றிய ஒளி கீதா சாஸ்திரத்தைக் கூறிப் பார்த்தனுடைய ரதத்தை வெற்றிபெற ஒட்டிய கண்ணபிரானுடைய உருவமே. அந்த உருவமானது நமது கவியின் இருதயத்திலும் எழுந்து அவருடைய கவிதைக்கு ஒரு சோபையைக் கொடுத்தது” என்று மிக அற்புதமாகக் குறிப்பிடுகிறார்.