பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1.தோற்றுவாய்

17


தனிச்சிறப்பு. அவர் ஆழ்ந்த சிந்தனையில் அரிதுயிலில் ஆழ்ந்துள்ளார். எனவே அத்திருமாலை அவருடைய பெருந்துயிலிலிருந்து தட்டி எழுப்ப, அருள் பாலிக்க ஆழ்வார்கள் பள்ளியெழுச்சிப் பாடல்களும், பாவைப் பாடல்களும் பாடியிருக்கிறார்கள்.

தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள், பாரதியின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது. அவருடைய சிந்தனையைத் தூண்டியிருக்கிறது. எனவே பாரதி ஆழ்வார்களின் வழியில் பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி பாடியுள்ளார்.

ஆழ்வார்கள் தங்கள் பக்தி வழி மூலம், பக்தி இயக்கத்தின் மூலம், மக்களை ஒன்றுபடுத்தி, மக்களின் முழு விடுதலைக்குப் பாதை காட்டுகிறார்கள். ஆழ்வார்கள் வாழ்க்கையை ரசித்துப் பாடுகிறார்கள். அது வைணவ தர்மத்தின் தனிச் சிறப்பாகும். வாழ்க்கையைத் துறந்து காட்டிற்குச் சென்று தனிமையாக நின்று வீடு பேற்றிற்குச் செல்ல முயலும்படி வைணவம் கூறவில்லை. வாழ்க்கையோடிணைந்த பக்தி மார்க்கத்தையே வைணவம் வலியுறுத்திக் கூறுகிறது. நல்ல உணவு, நல்ல ஆடை ஆபரணங்கள், நல்ல வாழ்க்கை இன்பங்கள் அமைந்து மனிதனும் மனித சமுதாயமும் முழுவிடுதலை பெற வேண்டும் என்பதே வைணவத்தின் முயற்சியாகும்.

மக்களைப் பேதங்களின்றி ஒற்றுமைப்படுத்துவது பக்தி மார்க்கத்தின் மற்றொரு தனிச்சிறப்பாகும். மக்களைப் பல்லாயிரக்கணக்கில், பல லட்சக் கணக்கில் திருவிழாக்களிலும் நோன்புகளிலும், பண்டிகைகளிலும், தோரோட்டங்களிலும், உற்சவங்களிலும் ஒன்று திரட்டிக் குவிப்பது பக்தி இயக்கத்தின் சிறப்பான பணிகளில் ஒன்றாகும். அவைகளைத் திறம்படச் செய்து காட்டிட, செய்து முடிக்க ஆழ்வார்களின் அருமையான கவிதைகளும் பாட்டுகளும் வழிகாட்டிகளாக அமைந்திருக்கின்றன.