பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 210

பாரதியின் கண்ணன் பக்தி, தேச பக்த உணர்வுடன், புதிய காலத்தின் தேவைகளுடன் இணைந்து புதிய பரிமாணங்களையும் புதிய உயரங்களையும் புதிய சிகரங்களையும் எட்டியிருக்கிறது. பழைய மரபுகளைத் தழுவி அவைகளின் வேர்மூலத்தில் நின்று அவைகளின் நேர் ஆக்கத்தன்மைகளை செரித்து உயர்த்தி அவைகளின் புதிய கிளைகளையும் இலை, மலர், காய், கனி, விதைகளையும் தோற்றுவித்து நமது பக்தியையும் சிந்தனைகளையும் அறிவையும் உயர்த்தியிருக்கின்றன. கண்ணனைக் கண்ணனாகவும், கண்ணம்மாவாகவும் பாடியிருப்பது பாரதியின் புதுமையாகும். பழய மரபுகளிலிருந்து எழுந்த புதுமையாகும்.

ஆழ்வார்களின் பக்திப் பாடல்கள், பெரும்பாலும் ஒருமுகப்பட்டது. பாரதியின் கண்ணன் பாட்டுக்கள் பன் முகப்பட்டது. ஆழ்வார்களின் இனிய பாசுரங்களைப் போலவே பாரதியின் கண்ணன் பாட்டுகளையும் மீண்டும் மீண்டும் படித்துப் படித்துப் புத்துணர்ச்சி பெறலாம். காலத்தால் ஆழ்வார்களின் அக, புறத் தேவைகளைக் காட்டிலும் பாரதியின் அக, புறத் தேவைகள் அதிகம். பாரதி காலத்தில், நாட்டு மக்களின், உலக மக்களின் ஆன்மீகத் தேவைகளும், அறிவுத் தேவைகளும், பொருளாயதத் தேவைகளும், லெளகீகத் தேவைகளும் அதிகம். எனவே கண்ணனிடம் பாரதியின் வேண்டுதல்களும் அதிகப்பட்டிருக்கின்றன, விரிவுபட்டிருக்கின்றன. அடிமைப்பட்டிருந்த பாரத மக்களைத் தட்டியெழுப்பப் புதிய ஆதர்சம் பாரதிக்குத் தேவைப்பட்டது. எனவே பாரதியும் ஆழ்வார்களின் வழியில் கண்ணனைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டார்.

கண்ணன் - என் தோழன்

கண்ணன் பார்த்தனுக்குத் தோழன். உயிர்த் தோழன். கண்ணன் பரமாத்மா. பார்த்தன் ஜீவாத்மா. கண்ணன் பரம்பொருள். பார்த்தன் கருவி. பாரதி பார்த்தனுடைய நிலையில் நின்று கொண்டு புதிய காலத்தின் கண்ணாடி மூலம் கண்ணனைக் காண்கிறார்.