பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ.சீனிவாசன்

18


பக்தி இயக்கமும் பக்தி மார்க்கமும் மனித குல விடுதலை இயக்கத்தின் ஒரு முக்கிய கட்டமாகும். அதற்கு பாரத நாட்டில் குறிப்பாகத் தமிழகத்தில் ஆழ்வார்களும் நாயன் மார்களும் வழி காட்டிகளாக இருந்தார்கள். மன்னராட்சி முறையில் இருந்த சில கொடுங்கோன்மைகளுக்கு எதிராகவும், பல படையெடுப்புகள் காரணமாக ஏற்பட்ட துன்பதுயரங்கள், மற்றும் கொடுமைகளுக்கு எதிராகவும், சாதி வேறுபாடுகள், சாதிக் கொடுமைகளுக்கு எதிராகவும், அஞ்ஞானத்திற்கும் அறியாமைக்கும் எதிராகவும் மக்களைத் தட்டி எழுப்ப ஆழ்வார்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். மக்களைத் திரளாகச் சேர்த்தும் ஒன்று திரட்டியும் செயலில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள்.

பாரதி, நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில், நாட்டு மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டி, அச்சத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும் விலகி விழிப்படையச் செய்து செயலில் ஈடுபடுத்த ஆழ்வார்களின் வழியையும் பின்பற்றி காலத்திற்கு ஏற்றவாறு காலத்திற்கு ஏற்ற வகையில் அவ்வழிகளைப் பின்பற்றிப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஆழ்வார்கள் தலை சிறந்த கர்ம யோகிகளாக வாழ்ந்து பக்தி மார்க்கத்தைச் செயல்படுத்தியிருக்கிறார்கள். பாரதி இருபதாம் நூற்றாண்டின்கர்ம யோகியாக மக்கள் அனைவரையும் கர்மயோக நிலைக்குக் கொண்டு செல்லும் வழிகாட்டியாக ஆழ்வார்களின் தொடர்ச்சியாகத் திகழ்வதைக் காண்கிறோம்.

வேதங்களின் சாரமாகவும், விளக்கமாகவும் ஆழ்வார்களின் பாசுரங்கள் கருதப்படுகின்றன. ரீமத் பாகவதத்தின விளக்கமாக ஆழ்வார்களின் பாசுரங்கள் விளங்குகின்றன. பாரதி தனது கவிதைகளுக்கும் கவிதைகளின் கருத்துக்களுக்கும் பாரதத்தின் பண்டையப் பண்பாடுகளையும் பகவத் கீதையையும் வழிகாட்டியாகக் கொண்டுள்ளார் என்று கூறலாம்.