பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 228

ஏழைகளுக்குத் தோழன் என்றும், செல்வம் மிகுந்தவர் மீது சீறி விழுவான் என்றும், ஏழை பணக்காரன் என்னும் வேறுபாட்டையும் நீக்க முனைந்தவன் கண்ணன் என்றும் பாரதி கூறுகிறார். துன்பத்தில் தளர்ச்சி கொள்ளாதவர்களுக்குச் செல்வத்தைக் கொடுத்து உதவுவான் கண்ணன் என்றும் பாரதி கூறுகிறார். கண்ணனுக்கு நண்பன் குசேலன், ஏழ்மையின் சின்னம் அவன்.' வறுமையில் வாடிய அக்குசேலனுக்குக் கண்ணன் உதவி செய்தான். அந்த உதவியைக் குசேலனுக்குத் தெரியாமலேயே செய்தான்.

கண்ணன் நாழிகைக்கு ஒரு புத்தி கொண்டிருந்தான், ஒரு நாளுக்கு ஒரு குணம் கொண்டிருந்தான் என்று பாரதி குறிப்பிடுகிறார். கண்ணன் குணத்தை, செய்கையை உறுதியாக இன்னதென்று அறிய முடியாது என்று கூறுகிறார். இதில் ஒரு நகைச் சுவையும், ஆச்சரியமும் அடங்கியிருப்பதுடன், ஒரு தத்துவ நிலையும் தென்படுகிறது. பாழிடத்தையும் நாடியிருப்பான், பாட்டிலும் கதையிலும் நேரம் கழிப்பான் என்றும் கூறுகிறார். கண்ணன், எந்த நேரத்திலும், எந்த வேலையிலும், எந்த நிலையிலும் இருப்பான் என்பது, கண்ணனுடைய உலகளாவிய பிரபஞ்ச நிலையைப் பாரதி குறிப்பிடுகிறார்.

கண்ணன் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வேறுபாடு காணமாட்டான். அன்பும் அறிவும் நிறைந்தவன். உயிர்க்குலம் அனைத்தும் ஏற்றமடைய வேண்டியதனைத்தையும் செய்வான் என்றெல்லாம் கண்ணனைப் பாரதி பாராட்டுகிறார்.

"வேதங்கள் கோத்து வைத்தான் - அந்த

வேதங்கள் மனிதர் தம் மொழியில் இல்லை

வேதங்கள் என்று புவியோர் - சொல்லும்

வெறும் கதைத் திரளில் அவ்வேதமில்லை