பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 233 கண்ணன் என்னும் என் தந்தைக்கு வயதாகிவிட்டது. ஆயினும் வாலிபக்களை மாறவில்லை. அவனுக்குத் துயரில்லை மூப்புமில்லை. எப்போதும் சோர்வில்லை. நோயே தொடுவதில்லை. பயமில்லை. பரிவு ஒன்றுமில்லை. ஒரு சார்பாக என்னும் பேதம் இருப்பதில்லை. நடுநிலையில் நின்று அனைவருக்கும் நன்மை செய்வான். துன்பம் மிகுந்து வருவோரிடம் அன்பு கனிந்து பேசுவான். அன்பினைக் கைக்கொண்டால், துன்பம் அனைத்தும் தீரும் என்பான். இன்பத்தை எண்ணுவோருக்கு இன்பமளித்து இன்புறுவான் என்று பாரதி கூறி முடிக்கிறார். பாரதி இப்பாடலில் கீதையின் வழியில் தனது கருத்தைத் தெளிவுபடக் கூறுவதைக் காண்கிறோம்.

கண்ணன் - என் சேவகன்

இப்பாடல் ஒரு அற்புதமான பாடலாகும். நகைச் சுவையும் தத்துவ ஞானப் பொருளும் நிறைந்ததாகும். இப்பாடலில் பாரதி தன்னைக் கண்ணனுடன் இணைத்துக் கொண்டு ஒன்றாக்கிக் கொண்டிருக்கிறார். இப்பாடல் ஈடு இணையில்லாத ஒரு அருமையான இலக்கியமாகும். இப்பாடலுக்கும் விளக்கமும் விரிவுரையும் தேவைப்படவில்லை. எளிய பதங்களில் பாரதி தனது அன்புள்ளத்தையும், அறிவையும் செயலையும் சிந்தனையையும் கண்ணனுடன் இணைத்துக் கொண்டிருக்கிறார். ஆண்டவன்ைத் தேடி நீசெல்லாமல், உனது அழ்ந்த பக்தியால் ஆண்டவனே உன்னைத் தேடி வந்து உனக்கு உதவிடுவான் என்னும் வைணவ தத்துவத்தின் படி, இப்பாடலில் கண்ணனே பாரதியைத் தேடி வந்து அவருக்கு சேவை செய்வதாகப் பாவித்து பாரதி குறிப்பிடுகிறார். இது ஒரு அருமையான புதுமையான வடிவத்தில் அமைந்த பாடலாகும். இப்பாடல் ஒரு உரையாடல் போல அமைந்திருக்கிறது. சாதாரணமாக, நாம் ஒவ்வொரு வீட்டில் நடப்பில் காணும் பிரச்னைகள், விவரங்கள், விளக்கங்கள், காரணங்கள், தோரணைகள் வேடிக்கைகள் ஆகியவற்றை இக்கவிதையில் காணலாம்.