பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 272

பாரதியின் கண்ணம்மா பாடல்களில் இப்பாடல் ஒரு புதிய பரிமாணமாகும். பாரதியின் இப்பாடல்களுக்கு விளக்கவுரையோ, விரிவுரையோ தேவையில்லை. ஆயினும் ஆழ்ந்த கருத்துச் செறிவு மிக்கவை. o

தமிழும், தமிழகமும் தமிழ் கூறும் நல்லுலகமும் செய்ததவப் பயன் பாரதி, மகாகவி பாரதி. பாரதத்தின் கவியுலகின் உச்சத்திற்குச் சென்று விட்டான் மகாகவி. உலகப் பெருவடிவமான கண்ணனுடன், அனைத்து வடிவங்களிலும் மகாகவி பாரதி இரண்டறக் கலந்து விட்டான். இணையற்ற இந்தக் கவிதைக்கு கவிதை உலகில் எங்கும் ஈடில்லை.

கண்ணனைக் கண்ணம்மாவாகவும் கண்ட பாரதி அந்தக் கண்ணம்மாவிற்குக் கூறும் இலக்கணம் தான் எத்தனை? எத்தனை?

தூயசுடர், வானொளி, சூறையமுது, மானுடைப் பேரரசு, வாழ்வுநிலை, ஊனமறு நல்லழகு, ஊறு சுவை, கண்ணின் மணி, கட்டியமுது, ஆசை மது, கனி, அள்ளுசுவை, நாதவடிவானவள், நல்ல உயிர், முல்லைநிகர் புன்னகையாள், மோதுமின்பம், எண்ணிப் பார்த்தாலும் கண்ணம்மா நின் சுவைக்கு அளவே இல்லை. அது அனந்தமானது. தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஒருருவமாய்ச் சமைந்தவள். உள்ளமுதம் இன்னும் எத்தனை எத்தனை விதம்.

பக்திச் சுவையில் பாரதி அனைவரையும் மிஞ்சிவிட்டார். கண்ணனோடு ஐக்கியமாகிவிட்டார். உலகப் பெருவடிவில் இணைந்துவிட்டார். பாரதியே நீ வாழ்க! தமிழ் உள்ளளவும் இவ்வுலகம் உள்ளளவும் நீ வாழ்க. கண்ணனும் கண்ணம்மாவும் உள்ளளவும் நீ வாழ்க! வாழ்க!!