பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

49


ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான் ” என்கிறார் என்றும், "சர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்பது, சநாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம் எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும் எல்லாக் காட்சிகளும் எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும் எல்லா நிகழ்ச்சிகளும் எல்லாச் செயல்களும் எல்லாம் ஈசன்மயம் (ஆதலால் எல்லாம் ஒன்றுக் கொன்று சமானம்). "ஈசாவாஸ்யம் ஜகத்” என்று ஈசாவாஸ்யோபநிஷத் சொல்லுகிறது. அதாவது இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது என்று பொருள்படும் எனவும், “எல்லா அறிவும் எல்லா இயக்கமும், எல்லாப் பொருளும் எல்லா வடிவமும், எல்லாம் தானேயாகி நிற்பான், எனவும் பாரதி தனது பகவத் கீதை தமிழாக்கத்திற்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிடுவதை ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம்.

பகவத் கீதையின் ஆதர்சமே ஆழ்வார்களுக்கும் சரி, பாரதிக்கும் சரி வழிகாட்டியாக இருந்திருக்கிறது என்பதைக் காண்கிறோம்.

பாரதி கண்ணனைப் பற்றி, கண்ணனின் காட்சியைப் பற்றிப் பாடும்போது தானும் கண்ணனாகவே ஐக்கியமாகி விடுகிறார். அவர் தன்னைப் பிறவித் துன்பத்திலிருந்து விடுவிக்கும் படியாகக் கண்ணனிடம் கோரவில்லை. இந்த உலக வாழ்க்கையிலேயே அனைத்து இன்பங்களும் அமைய வேண்டும் என்றும் இந்த உலக வாழ்க்கையே அத்தனை துன்பங்களிலிருந்தும் முழு விடுதலை பெற வேண்டும் என்று கோருகிறார்.

கண்ணனுடைய வடிவங்களை இயற்கையுடன், சமுதாய நலன்களுடன், தனிமனித நலன்களுடன் (இங்கே தனி மனித நலன் என்பது சுயநலமல்ல) பொதுவான வாழ்க்கை நலன்களுடன் சமுதாய உணர்வுடன் தனி மனித உணர்வுடன் இணைத்துத் தொடர்பு படுத்திப் பாடுகிறார்.