பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3.பள்ளியெழுச்சிப பாடல்கள்

62


விழித் தெழுந்துத் துள்ளிக்குதித்துத் தங்கள் தங்கள் பணிகளைத் தொடங்கத் தொடங்குகின்றன.

அரங்கநகர்ப் பெண்கள், காவிரியிலும், அதன் கால்வாய்களிலும் தடாகங்களிலும், குளித்துவிட்டு தலைமுடியைப் பிழிந்து உதரிக் கொண்டு, ஈரத்துணியுடனும், இடுப்பில் குடங்களுடனும், அசைந்து நெளிந்து வந்து கொண்டிருக்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. ஆண்களில் பலரும் மலர்வனங்களில் பூத்து நிற்கும் மலர்களையும் துளசி அரும்புகளையும் எடுத்துக் குவித்துத் தொடையளவு மாலைகளைத் தொடுத்துக் கொண்டுக் கோவிலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். பலவகைத் தொழில் செய்வோரும் காலையில் எழுந்து தங்கள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தங்கள் தங்கள் வேலைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். தெருக்களில் காய்கனிகள், தயிர், மோர், மலர்கள் இலைகள் இதர பொருள்கள் விற்போர் கூவும் சத்தமும் இதர ஒலிகளும் சேர்ந்து இரைச்சல் பெருகிக் கொண்டிருக்கிறது. மக்களின் ஆரவாரங்களும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

மக்கள் கூட்டமும் தேவர்கள் கூட்டமும், இறைவனும், இந்திரனும் அறுமுகனும், மருதரும், வசுக்களும், முனிவர்களும் விச்சாதரர்களும், இயக்கரும், தும்புருவும், நாரதரும், கந்தருவரும், மாதவர்களும், வானவர்களும் சாரணர்களும், மற்றவர்களும், கூட்டம் கூடியும், ஆட்டங்கள் ஆடியும், பாட்டுக்கள் பாடியும் குரலோசை எழுப்பியும், இசைக் கருவிகளின் இன்னிசை எழுப்பியும், தங்கள் தங்கள் ரதங்களுடனும் வண்டிகளுடனும் வாகனங்களுடனும், குதிரைகள், யானைகளுடனும் குவிந்து கோயில் வாசலில் அரங்கனை சேவிக்க முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நானும் தொடையளவு துளசி மாலையுடன் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அரங்கனே, பள்ளியெழுந்தருள்வாயாக! என்று