பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

63


ஆழ்வார், மிக அற்புதமாக ஆண்டவனையே தட்டி எழுப்பும் இந்தத் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் தமிழ்ச் சுவையும், கவிச்சுவையும், பக்திச் சுவையும் நிறைந்த பாடல்களாகும். இத்தகைய அற்புதமான இசை வடிவத்தின், கவிதை வடிவத்தின் வழியில் மகாகவி பாரதி தனக்கே உரித்தான முறையில் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை இனிமையாக, துடிப்புடன் பாடுகிறார்.

பாரதநாட்டு மக்களாகிய நாம் ஒற்றுமைப்பட்டு நின்று தவம் செய்து வருகிறோம். நமது தவத்தின் பயனாய் பொழுது புலர்ந்துவிட்டது. அதனால் புன்மையிருட் கணங்கள், தீய சக்திகளான இருள் பேய்கள், ஒடிவிட்டன. அறிவு என்னும் ஆதவன் உதித்துவிட்ட காரணத்தால் எல்லா இடங்களிலும் பொன்மயமான அறிவு ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. பாரதத் தாயே, உன்னை வணங்கி வாழ்த்துவதற்கு ஆயிரக் கணக்கான தொண்டர்களாகிய நாங்கள் உன்னைச் சூழ்ந்து நிற்கிறோம். இன்னும் ஏன் உறக்கம். பாரதத்தாயே பள்ளியெழுந்து எங்களுக்கு அருள்புரிவாயாக என்று கவிஞர் மிக அழகாக, அற்புதமாகப் பாடுகிறார்.

பொழுது புலர்ந்ததை, அறிவாகிய சூரியன் ஒளிபரப்ப எழுந்து விட்டதாகவும் தீய சக்திகளான தீய குணங்களான பல புன்மைகளை இருளுக்கும் ஒப்பிட்டு அறிவு என்னும் சூரியன் எழும்போது அறியாமை மடமை என்னும் இருள் நீங்குவதாகக் கவிஞர் பாடியுள்ளது மிகவும் பொருத்தமானதும், நாட்டின் நிலைமைகளுக்கு மிகவும் பொருந்துவதாகவும் உள்ளதைக் காண்கிறோம்.

“பொழுது புலர்ந்தது யாம் செய்ததவத்தால்
புன்மையிருட் கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி