பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

65


சூரியனின் பேரொளிவானகமெங்கும் பரவிவிட்டது. உலகம் எல்லாம் உன் ஒளிவீசத் தொடங்கியிருக்கிறது. உன் சேவடியில் சமர்ப்பிப்பதற்காக எங்கள் நெஞ்சங்களில் தோன்றுகின்ற அன்பு மலர்களை பாச மலர்களை கனிவோடு நாங்கள் கொண்டு வந்து நிற்கிறோம்.

பாரதத் தாயே! எத்தனை கோடி சுருதிகளைப் படைத்துள்ளாய். எத்தனை கோடி சாத்திர நூல்களைச் செய்துள்ளாய். எத்தனை அறிவோடு எங்களை ஈன்றெடுத்துள்ளாய். கொடியவர்களும் அரக்கர்களும் நடுங்கும் படியாக உன் கையில் சூலாயுதத்தையும் தாங்கிக் கொண்டிருக்கிறாய். இன்னும் தூக்கத்தில் ஆழ்ந்து எங்களை ஏன் தவிக்க விட்டுக் கொண்டிருக்கிறாய். உறக்கத்திலிருந்து எழுந்து எங்களைக் காப்பாயாக என்று அன்னையை பாரதி வேண்டுகிறார்.

வேதங்கள், சாத்திரங்கள், காப்பியங்கள், எண்ணற்ற பல காவியங்கள், சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள், அறநூல்கள், அரசியல் நூல்கள், அறிவியல் நூல்கள், தத்துவ நூல்கள், பக்தி நூல்கள், ஞான நூல்கள் முதலிய கோடிக் கணக்கான அறிவுக் களஞ்சியங்களைப் பெற்றெடுத்தவள் பாரத அன்னை. இந்த அறிவுச் செல்வங்கள் எல்லாம், பாரத மக்களை உயர்த்திப் பாதுகாத்து வந்திருக்கின்றன. இத்தனை வகை அறிவுச் செல்வங்களும் போதாது என்றும் அவைகளை மீறியும் அக்கிரமங்களும் அநியாயங்களும், ஆக்கிரமிப்புகளும் கொடுமைகளும் தோன்றும் போது அவைகளைச் செய்யும் கொடுமைக்காரர்களையும், அரக்கர்களையும், அயோக்கியர்களையும், துஷ்டர்களையும் ஒழித்து உலகைக் காப்பதற்காக அன்னையின் கையில் சூலாயுதமும் இருக்கிறது. அறவழி போதாவிட்டால், பாரதத்தாய் ஆயுதம் எடுப்பதற்கும் தயாராக நிற்பதையும் பாரதி இங்கு நினைவூட்டுகிறார் போலும்.