பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

69


குழந்தைகள் பேசும் மழலை மொழிக்கு செவிகொடுக்காத தாயும் உலகில் உண்டோ! குழந்தைகளின் குரலுக்கு இரங்காத ஒரு தாய் உலகில் உண்டோ? அதிலும் பெரும் பாரத நாட்டிற்கே அரசியான கோமகளுக்கு அந்த நிலை வருமா? என்று கவிஞர் கேட்கிறார். பாரதி காலத்தின் கணக்குப்படி பாரத மக்களின் மொழிகள் மொத்தம் பதினெட்டு. இன்றும் அம்மொழிகள் பாரத மக்களால் பேசப்பட்டும், வளர்க்கப் பட்டும் வருகின்றன. பாரத மக்கள் தங்களுடைய பதினெட்டு மொழிகளிலும் பாரத அன்னையைப் புகழ்ந்து, பாராட்டிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பெருமை வேறு எந்த நாட்டிற்கு இருக்கிறது? அன்புடன் வந்து எங்களை ஆண்டு அருள் செய்வாயாக! ஈன்றவளே! உனது உறக்கத்திலிருந்து எழுந்து வந்து எங்களைக் காப்பாயாக! என்று மகாகவி பாரதி பாடுவது நம் அனைவரின் உள்ளத்தை உருக்குவதாகும்.

மதலையர் எழுப்பவும் தாய் துயில் வாயோ
மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ?
குதலை பொழிக்கிரங்கா தொரு தாயோ?
கோமகளே! பெரும் பாரதர்க்கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்தெமை ஆண்டருள் செய்வாய்
ஈன்றவளே! பள்ளி யெழுந்தருளாயே!

என்று பாரதி பாடி பாரத மாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை உணர்ச்சி பொங்கப் பாடி முடிக்கிறார்.