பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

73


ஆண்டவனே தூங்கி விட்டால் இயற்கையும் உலகத்து உயிர்களும் செயல் இழந்து விடும் என்னும் அச்சத்தில் ஆழ்வார் தனது ஆழ்ந்த பக்தி உணர்வுடன் அரங்கனைத் துயில் எழுப்புகிறார்.

நாடு அடிமைப்பட்டு விட்டது, நாட்டுமக்கள் சுதந்திரமான வாழ்வை இழந்து விட்டார்கள். அன்னிய ஆட்சியின் அவலங்கள், கொடுமைகள், அலட்சியங்கள் கொள்ளைகள் காரணமாக நமது வயல் வெளிகள் காடுகரைகள் பாழாகி விட்டன. நமது நீர் நிலைகள், ஆலயங்கள், சேதமடைந்து சீர் கெட்டு விட்டன. காடுகளும், மலைகளும், ஆறுகளும், மரங்களும் அழிந்து அரை நாசம் அடைந்து விட்டன. மக்கள் வறுமைப்பட்டு, பசி டட்டினியால் வாடி வதங்கி செத்து மடிகிறார்கள். நோய் நொடிகள் சுலபமாக மக்களைப் பிடித்து விடுகின்றன.

கல்வி நிலையங்கள் கெட்டு அழிந்து விட்டன. கவனிப்பார் இன்றி மங்கிப் போய் விட்டன. மக்கள் கல்வி அறி விழந்து அறிவழிந்து கல்லாமையிலும், அறியாமையிலும், அச்சத்திலும், மூழ்கியிருக்கிறார்கள். இந்த இருள் சூழ்ந்த நிலை மாறத் தொடங்கியிருக்கிறது. பொழுது புலரத் தொடங்கியிருக்கிறது. சூரியன் உதித்தவுடன் சேதனப் பிரகிருதிகள் மட்டுமேயன்றி அசேதனப் பிரகிருதிகளும் புதிய ஜீவனைப் பெற்று, ஒரு புதிய தெம்பையும், உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கிறது. என்று பாரதி கூறுவதைப் போல, சூரியோதயம் போல ஒரு புதிய மார்க்கம், ஒரு புதிய இயக்கம், விடுதலை இயக்கம், தேசீய விடுதலை இயக்கம், தோன்றி மக்களின் உள்ளங்களில் புத்துணர்ச்சியும், புத்தெழுச்சியும் தோன்றத் தொடங்கி விட்டன. புன்மையிருட் கணம் தொலையத் தொடங்கி விட்டது. மறையத் தொடங்கி விட்டது. அறிவு என்னும் இரவியின் ஒளிபடரத் தொடங்கிவிட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்களும், அறிவாளிகளும், தேசபக்தர்களும், சுதந்திர உணர்வில் விழிப்படைந்து திரளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த