பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. சாதி வேறுபாடுகளை நீக்கி மக்களை ஒன்றுபடுத்தும் பணியில்

சாதி வேறுபாடுகளுக்கும், சாதிப் பாகுபாடுகளுக்கும் எதிராக ஆழ்வார்கள் பலரும் பாடியிருக்கிறார்கள். பக்தி இயக்கமே அனைத்து மக்களுடைய ஒற்றுமையைக் குறிக்கும் இயக்கமாகவே வளர்ந்துள்ளது.

சமுதாய முன்னேற்றத்திற்கு சமுதாயத்தின் ஒற்றுமை என்பது ஒரு அவசியமான நிபந்தனை நிலையாகும். சமுதாய ஒற்றுமை சீர்குலைந்தால் அல்லது நிலை குலையுமானால் சமுதாய முன்னேற்றம், மனித குல முன்னேற்றம் தடைபடும். இந்து சமுதாயத்தின் வரலாற்று அனுபவங்களிலிருந்து நாம் படிப்பினைகள் கற்றுக் கொள்வது எதிர் கால முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

இந்திய நாட்டில் சாதிப் பிரிவினை ஏற்பட்டது என்பது முதலில், வேலைப் பிரிவினையின் அடிப்படையிலாகும் என்பது ஒரு ஆய்வுக் கருத்தாகும். ஆயினும் பின்னர் அந்தப் பிரிவினையைப் பயன்படுத்தி ஆதிக்கத்தில் இருந்தவர்கள், பெரும்பாலான மக்களை அடிமைப்படுத்தவும். தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் நீடித்துவைத்துக் கொள்ளவும் சாதி வேறுபாடுகளையும் மத வேறுபாடுகளையும் உண்டாக்கி, அதைப் படிப்படியாகக் கெட்டிப்படுத்தி விட்டார்கள். அதனால் ஏற்பட்ட கொடுமைகள் நாளடைவில் இந்திய சமுதாயத்தின் ஒற்றுமையைக் குலைத்து இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்து விட்டது. இந்தக் கொடுமைகளை எதிர்த்து பக்தி இயக்கம் குரல் கொடுத்திருக்கிறது.

சாதி அமைப்பு இந்திய நாட்டில் தோன்றும்போது, கூட அது பிறப்பால் அமையவில்லை. குணத்தாலும் செய்கையாலும் என்றுதான்