பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4.சாதி வேறுபாடுகளை நீக்கி மக்களை ஒன்றுபடுத்தும் பணியில்

76


சாதிப்பிரிவுகள் தொடக்கத்தில் ஏற்பட்டன. வர்ணாசிரம தர்மத்தில் வர்ணம் என்பது உடம்பின் தோலின் நிறத்தைக் குறிப்பிடவில்லை. உள்ளத்தின் தூய்மையை அதன் நிறத்தையே குறிப்பனவாக இருந்தன. இராமனும், கண்ணனும் நிறத்தால் கருப்பர்கள் தானே! எனவே பின்னர் நாளா வட்டத்தில் ஆதிக்க சக்திகள் பல போலிச் சுவடிகளைக் கற்பித்து அவைகளைச் சமுதாயத்தின் எண்ணத்தில் சிந்தனையில், வாழ்க்கையின் பழக்கவழக்கங்களில் நடை உடை பாவனைகளில் பிறப்பால் சாதி என்னும் பொய்க் கருத்துக்களை நிலை நிறுத்தி உறுதிப் படுத்திவிட்டார்கள். இதுவே பின்னர் சாதி அமைப்பு முறையில் பலவேறு பிரிவுகள் அதிகப்படவும், நான்கு சாதி நாற்பதினாயிரம் சாதிகளாகப் பிரியவும் அதில் பாகுபாடுகளும், வேறுபாடுகளும், தீண்டாமை, காணாமை போன்ற கொடுமைகளும் தோன்றவும் காரணமாகி சமுதாயத்தைச் சீர்குலைத்துள்ளன. இந்தப் பாகுபாட்டுக் கொடுமைகளை எதிர்த்து இந்திய சமுதாய வரலாற்றில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அதில் பக்தி இயக்கம் ஒரு முக்கிய பங்கை ஆற்றியிருக்கிறது. ஆழ்வார்களின் பல பாடல்களிலும் சில ஆழ்வார்களின் பிறப்பு வளர்ப்பு மற்றும் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றிலும் அதை நாம் தெளிவாகக் காணமுடிகிறது.

பாரதி, தனது காலத்தில் இருந்த சாதிபாகுபாடுகள், வேறுபாடுகள், கொடுமைகள் ஆகியவற்றைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். அன்னிய ஆட்சிக்கு எதிராக இந்திய மக்களின் ஒற்றுமை அவசியப்பட்டது. இந்தச் சாதிப் பாகுபாடுகளும் வேறுபாடுகளும் கொடுமைகளும் இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருந்தன. சமூக நீதியின் அடிப்படையில் அனைத்து மக்களின் முழுமையான சமத்துவமும் சம நீதியும் மக்களின் சமுதாய ஒற்றுமைக்கு மிகவும் அவசியமானதாகும். இதைப் பாரதி மிகவும் அருமையாகவும்