பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4.சாதி வேறுபாடுகளை நீக்கி மக்களை ஒன்றுபடுத்தும் பணியில்

78


சீலம், அறிவு, தர்மம் - இவை
சிறந்தவர் குலத்தினிலே சிறந்தவராம்
மேலவர் கீழவர் என்றே வெறும்
வேடத்தினில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச்சுவடியை யெல்லாம் - இன்று
பொசுக்கி விட்டால் எவர்க்கும்
நன்மை உண்டென்பான்

என்று மிகவும் தெளிவாகவே குறிப்பிட்டுக் கூறுகிறார்.

ஆழ்வார்களில் பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள் ஆகிய நால்வர் பிறப்பில் சாதியில்லை. பொய்கையாழ்வார், பொய்கையில் பொற்றாமரையில் பிறந்ததாகவும், பூதத்தாழ்வார் மல்லிகைப் புதரின் நடுவில் நீலோத் பல மலரிலும், பேயாழ்வார் கோவில் கிணற்றில் செவ்வல்லிமலரிலும், ஆண்டாள் கோயில் நந்தவனத்தில் துளசிச் செடியின் கீழ் அவதரித்ததாகவும், ஆழ்வார்களின் அவதாரச் சிறப்புகள் குறிப்பிடுகின்றன. இனி திருப்பாணாழ்வார் பஞ்சமர் குலத்திலும், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் வெள்ளாளர் குலத்திலும் குலசேகராழ்வார் அரசகுலத்தில் பிறந்ததாகவும், மதுரகவியாழ்வார் பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆகியோர் முன் குடுச் சோழியர் குலத்தில் பிறந்ததாகவும் ஆழ்வார்களின் வரலாறுகள் குறிப்பிடுகின்றன. எனவே ஆழ்வார்களின் பிறப்பே, சாதி சமத்துவத்தையும் சாதி ஒற்றுமையையும் பெண்பால் பெருமையையும் குறிப்பதாக உள்ளது.

ஆழ்வார்களில் திருப்பாணாழ்வாருடைய வரலாற்றுக் கதை மிகவும் சிறப்பும் தனித்தன்மையும் கொண்டதாக உள்ளது.