பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4.சாதி வேறுபாடுகளை நீக்கி மக்களை ஒன்றுபடுத்தும் பணியில்

86


ஆழ்வார்களில் போற்றுதற்குரிய நம்மாழ்வார், நாலாயிரம் பாடல்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவர் திருவாய் மொழியில் பயிலும் சுடரொளி எனத் தொடங்கும் பாடல்களில்,

"குலந்தாங்கு சாதிகள் நாலிலும்
கீழ்கழிந்து, எத்தனை
நலந்தானிலாத சண்டாள சண்
டாளர்களாகிலும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல்
மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி
யார் எம் அடிகளே,"

என்றும் பாடுகிறார்.

நான்கு குலங்களிலும் தாழ்த்தப்பட்டு, மிகவும் இழிவாகக் கருதப்பட்டு, எத்தகைய நலன்களும் இல்லாமல் மனித வாழ்க்கையில் கடைசியில் வாழும் சண்டாளர்களுக்கும் சண்டாளர்களாக இருப்பினும், அவர்கள், வலப்புறத்தில் சக்கரத்தைத் தாங்கி நிற்கும் மணிவண்ணனான திருமாலின் அடிய்ார்களாகில் அவர்களுக்கு அடியார்களாக இருப்போம் என்று சாதி வேறுபாடுகளை மறுத்து, திருமால் அடியார்கள் அனைவரும் ஒன்று என்னும் கருத்தை வலியுறுத்தி, நம்மாழ்வார் மிகவும் அருமையானதொரு பாடலைப் பாடியுள்ளார்.

திருமங்கையாழ்வார் அருளியுள்ள “திருவெழுகூற்றிருக்கை” என்னும் பிரபந்தப் பாசுரங்களில்,

“நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை
மேதகு ஐம்பெரும் பூதமும் நீயே,