பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

116 ஆழ்வார்கள் காலநிலை மனைகளின் வாயிற்கடைகளிலே நின்று துயிலெழும்படி அவர்களைப் பலபடியாகவும் வேண்டி அழைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது யாவரும் அறிவர். இம்மார்கழி நீராட்டம், கோகுலத்து ஆயர்குலத்து இளம்பெண்கள் கண்ணபிரானைத் தாங்கள் நாயகனாக அடையவும் நாடுசெழிக்கவும் வேண்டிப் பாவை நோன்பு நோற்ற காலத்து நடத்திய தாகும். பாவை நோன்பு என்பது கன்னிப் பெண்களால் மார்கழிமாதத்திற் றொடங்கப்பெற்று அம்மாதத்துப் பௌர்ணிமையோடு முடிக்கப்பெறும் ஒரு விரதமாம். நல்ல நாயகரை அடையவும் நாடு செழிக்கவும் காத்தியாயனீதேவியை நோக்கிக் கன்னியரால் இந் நோன்பு அம்மாதத்தே நடத்தப் பெறுவதென்பதும், சங்கநாளிலே சாந்திரமான முறைப்படி, தைந்நீராடல் என்ற பெயர்பெற்று வழங்கிவந்ததென்பதும், மலையாள நாட்டாரால் திருவாதிரைத் திருவிழா என்றும், சைவரால் ஆருத்திராதரிசனம் என்றும் கொண்டாடப்படுந் திருநாள் இவ்விரத முடிவு தினமே என்பதும் பிறவும் நான் செந்தமிழ்ப்பத்திரிகைமுதலியவற்றில், மார்கழி நோன் பாகிய தைந்நீராடல்' என்ற தலைப்பெயரின் கீழ் நன்கு விளக்கியுள்ளேன்." இவ்வாறு ஆய்ச்சியர் மார்கழிநோன்பு நோற்ற முறையை ஆண்டாள் தம் காலவழக்குக்களுடன் கொண்டு மொழிந்து பாடியவற்றுள், அடியில்வரும் 13-ஆம் பாசுரம் ஆராய்ச்சிக்கு உரியதாகின்றது: 1. ஹரிசமய திவாகரம் தொகுதி-4, பகுதி-12.