பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

ஆழ்வார்கள் காலநிலை

இவற்றால், சிறுவனாய்ப் பட்டமெய்திய பல்லவ மல்லனான நந்திவன்மனுக்கு, அவன் பெற்றோரிட்டு வழங்கிய பிள்ளைத்திருநாமம், பரமேசுவரன் என்பது தெரியலாம், ஆகவே, தான் சிங்காதனமேறியதும் தன் முன்னோர் வழிபட்டு வந்த திருமாலுக்குத் தன் பிள்ளைத் திருநாமத்தால பரமேச்சுவர விண்ணகரம் என்ற பெயருடன் நந்திவன்மன கச்சியில் ஆலயமொன்று கட்டிப் பிரதிட்டித்தான் என்பதும், அதனை நன்கறிந்தே திருமங்கையார் அவன் வரலாறுகளை அவ்விண்ணகரப் பதிகத்தில் விரியக்கூறி — ‘பல்லவன் பணிந்த பரமேச்சுர விண்ணகர மதுவே’ என்று பாட்டிறுதி தோறும்வரப் பாடலாயினர் என்பதும் மிகத்தெளிவாதல் காண்க.

பல்லவர்கோன் பணிந்த' என்பதற்குப்—பல்லவ வேந்தன் திருப்பணி செய்து வணங்கிய—என்பது பொருளாம்: ‘நந்திபணி செய்த நகர் நந்திபுர விண்ணகரம்’ என்று இவ்வாழ்வாழ்வாரே கூறியவாறு இதனைக் கொள்க.

இவற்றால், பல்லவமல்லனான நந்திவன்மனே பரமேச்சுர விண்ணகத்தைக் கட்டிப் பிரதிஷ்டித்தவனும் ஆழ்வாரால் அவ்விண்ணகரப் பதிகத்திற் புகழ்ந்து பாடப்பட்டவனும் ஆவன் என்பது மலையிலக்காதல்' காணலாம்.

ஆயின், திருமங்கைமன்னனாற் சிறப்பித்துப் பாடப் பெற்ற கோச்செங்கணானைப்போல இந்நந்திவர்மனும் அவர்காலத்துக்கு முற்பட்டவனா, அன்றிச் சம காலத்தவனா- என்ற கேள்வி அடுத்து நிகழக்கூடிய தாகும். இதற்கு இவ்வாழ்வார் கூறும் மற்றோர் அரிய செய்தி தக்க விடை தந்து நிற்றலைக் கூறுவேன்.