பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

258 ஆழ்வார்கள் காலநிலை மான்கட்கு உரியவாயிருந்த மலையரண்களைச் சேரர் ஒருகாற் கைப்பற்றியவர் என்பது சங்கச் செய்யுட் களால் நன்கறியப்படுதலின், ஆழ்வார்க்குரிய கொல்லி நகரும் அவற்றுள் ஒன்றாகக் கொள்ளத்தகும். “கொல்லிகாவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் என்று இவ்வாழ்வாரே பாடுதலின், தம் தலைநகர் *கொல்லி' என்னும் பெயர்பெற்றிருந்தமை வெளியாம். குறுந்தொகையின் 34ஆம் செய்யுள் பாடியவர் கொல்லிக் கண்ணன் என்ற பெயர்பெற்ற புலவராவர். இப்பெயரி னின்று கொல்லியென்ற ஊரொன்று பழைமையாகவே உண்டென்பது தெரிய வருதலின், குலசேகராழ்வார் காலத்தில் சேரராஜதானியாக இக்கொல்லி அல்லது கொல்லிநகர், அப்பெயர் பெற்றுள்ள மலையிடை அமைந் திருத்தல் கூடியதேயாம். கொல்லிமலையின் உள்ளிடமான ஊர்கள், பிறர் எளிதிற் செல்லக் கூடாத அரணுடையன என்பது இக் காலத்தவரும் நன்கறிவர். இத்தகைய மலையரணுள்ள ஓரொன்று பிற்பட்ட சேரவேந்தரால் தம் தலை நகராகக் கொள்ளப்பட்டதற்கு, குலசேகரர் காலத்தோ அவர் 1. 'அதிகனவ னணித்தாக ஓங்கெயில் சூழ் மலையரணத் துள்ளுறைவான்” (பெரியபு. புகழ்ச்சோழ. 17) என, கரு வூர்க்கு அணித்தாகக் கடிய மலையரண் பெற்றிருந்த கொல்லி மலையின் இயல்பைச் சேக்கிழார் குறிப்பிடுதலுங் காண்க. 2. இங்ஙனம் கைப்பற்றிய சேரன், தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை என்பான்; 'கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப், பல்வேற்றானை யதிகமானோ, டிருபெரு வேந் தரையு முடனிலை வென்று” என இவனைப்பற்றிக் கூறப்படு தல் காண்க (பதிற்றுப். 8-ம் பத்துப் பதிகம்.). தகடூர்யாத் திரை என்ற பழைய நூலும் இச்சேரன் போரினைச் சிறப்பிப்ப தாகும்.