பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     சிந்தையும் உள்ளமும்

     சிந்தை செப்பிற்று:
     வழிதவறியோர்க்கு விழிநான்,
     கலங்கரை விளக்கு.
     மண்ணில் உழலினும் விண்ணில் விரைவேன்;
     பார்என் பெருமையை!
     முடவன் எனினும் அடலேறு அனையவன்
     மக்கள் மயங்கிச் சிக்கலில் சூழ்கையில்
     ஒல்லும் வகையால் நல்வழி காட்டுவேன்.
     உள்ளம் உரைத்ததுவே
     உண்மையை உரைத்தாய் அன்ப!
     உலகில் உள் ளாய் நீ என்றுணர்வாய்,
     கலக்கமற்றதனைக் கண்களால் காண்கிறேன்.
     உலகினை அளப்பது உனக்குத் தெரியும்.
     அகம் அளந்துணர்வது என்றன் கையிலே
     இறையறிவினை நான் முறையொடும் அருள்வேன்.
     இறைவன் உறைவிடம் எங்கென நாடுவாய்;
     நானோ அவனின் தேனார் இருப்பிடம்.
     கல்வியினில் நீ கசப்பினைக் காண்பாய்;
     நானோ அதிலே மீனாய்த் திளைப்பேன்.
     உண்மையின் அசைவில்
     விளக்கொளியாக விளங்கிடுவாய் நீ,
     கவினுரு உலகின் தவத்தொளி நானே.
     கால எல்லையும் ஞால வரம்பும்
     உனக்குள் அறிவேன்.
     மனஉற வுள்ளதால் எனக்கவை இல்லை;
     நான் ஓர் உலகப் பறவை,
     தான்எனும் சிந்தையே, யார் உயர்ந்தவர்சொல்?

106