பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     வாழ்க்கைக் கடலில் நீஓர் அலையே வேறன்று,
     வாழ்க்கை ஆய்வின் மதிப்பும் மாண்பும் கொண்டதுவே

     மண்ணாய் இருக்கும் வரையில் பண்பாடற்றவனே
     உண்மை அன்பை உளத்தில் கொண்டால் உயர்வாய்நீ.

     உண்மைக்காக உயிரைத் தரும்ஓர் உணர்வுண்டா?
     மண்ணு டலுக்குள் வாழ்வைப் படைத்து மாண்புறுவாய்

     உயிரில் லாவிடில் கொடுப்பதற்கு என்னுண்டு?
     உயிரால் தானே இறப்பைக் கொள்வாய் உயர்வடைவாய்?

     உருள்வான் மண்ணை வாடகை வீடாய் உதறிஎழு
     பொருள்இல் வாழ்வைத் தள்ளி அன்பின் புத்துலகை,

     ஆக்கிடுவாய் நீ தேக்கிடுவாய்நீ ஒழுங்கிவையே
     வாழ்க்கை உண்மை வழியில் ஓங்கும் எளிதாக.

     உன்னுள் மறைந்த வாழ்க்கை ஆற்றல் ஓங்கட்டும்
     உன்னுள்ளத்தில் உணர்ச்சிப் பொறிஒளிவீசட்டும்.

     இருளை அகற்றி எழுசெங்கதிராய்த் தோன்றிடுநீ
     அருமைத் தோழா மாணிக்கங்கள் ஒளிரட்டும்.

109